search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை இன்று சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு
    X

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை இன்று சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் இன்று சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார். பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள். #ChandrababuNaidu #RahulGandhi
    புதுடெல்லி:

    பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர முயற்சியில் ஏற்கனவே ஈடுபட்டு வருகிறார்.

    இதேபோல பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் களம் இறங்கி உள்ளார்.

    இதற்காக அவர் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சரத்யாதவ், பா.ஜனதாவில் இருந்து விலகிய யஷ்வந்த்சின்கா ஆகியோரை சந்தித்து பேசி இருந்தார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் இன்று சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார்.



    பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள். ஏற்கனவே இரு கட்சியினர், இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்திவிட்டனர். இதன் தொடர்ச்சியாக இரு கட்சிகளின் தலைவர்களும் இன்று சந்திக்கிறார்கள்.

    ராகுல் காந்தியை நேரடியாக சந்திரபாபு நாயுடு சந்தித்து பேச இருப்பது இது முதல் முறையாகும்.

    ஆந்திராவில் காங்கிரசும், தெலுங்கு தேசமும் எதிர்துருவங்களாக இருக்கும் கட்சிகளாகும். பா.ஜனதாவுக்கு எதிராக வலிமையான கூட்டணியை உருவாக்க இந்த இரு கட்சியும் கூட்டணி அமைக்கின்றன.

    தெலுங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு முன்பு மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தான் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு சந்திக்கிறார்.

    இந்த சந்திப்பின் போது தெலுங்கானா தேர்தலில் இரு கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி இறுதி செய்யப்படும்.

    ராகுல் காந்தியை தொடர்ந்து சரத்பவார், பரூக் அப்துல்லா, வீரப்பமொய்லி உள்ளிட்ட தலைவர்களையும் சந்திக்க சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். #ChandrababuNaidu #RahulGandhi

    Next Story
    ×