search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவா முதல் மந்திரி மனோகர் பரிக்கர் நீண்ட நாட்களுக்கு பின்னர் பணிகளை தொடங்கினார்
    X

    கோவா முதல் மந்திரி மனோகர் பரிக்கர் நீண்ட நாட்களுக்கு பின்னர் பணிகளை தொடங்கினார்

    கனையப் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவந்த கோவா முதல் மந்திரி மனோகர் பரிக்கர் நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது அலுவலகம்சார்ந்த பணிகளை இன்று வீட்டில் இருந்தவாறு கவனிக்கத் தொடங்கினார். #ManoharParrikar #ManoharParrikarbacktowork
    பனாஜி:

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
     
    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் 15-9-2018 அன்று  மனோகர் பரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

    மனோகர் பரிக்கர் தொடர்ந்து சிகிச்சைக்கு சென்று விடுவதால் கடந்த 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என கோவாவில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் குறிப்பிட்டிருந்தார்.

    எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த மந்திரி ஒருவரிடம் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதே கோரிக்கையை காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகிறது.

    இதற்கு பதிலளித்த கோவா பா.ஜ.க. தலைவர் வினய் தெண்டுல்கர், கோவா முதல் மந்திரி பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மனோகர் பரிக்கர் முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார் என அறிவித்தார்.

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் ஒருமாத காலம் சிகிச்சை பெற்றுவந்த மனோகர் பரிக்கர் கடந்த 14-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு கனையத்தில் புற்றுநோய் பாதித்திருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் தனது வீட்டில் இருந்தவாறு முதல் மந்திரியின் அலுவலகம்சார்ந்த பணிகளை மனோகர் பரிக்கர் இன்று கவனிக்கத் தொடங்கினார்.

    கோவா முதலீட்டு மேம்பாட்டுத்துறை வாரியம் சார்ந்த அதிகாரிகள் கூட்டம் இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரோஹன் கவுன்ட்டே, சுற்றுலாத்துறை மந்திரி மனோகர் அஜ்கவுன்கர் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் பல்பேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

    இன்றைய கூட்டத்தில் 230 கோடி ரூபாய் அளவிலான 7 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் இதன் மூலம் சுமார் 400 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனவும் கோவா அரசு இன்று இரவு வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ManoharParrikar #ManoharParrikarbacktowork
    Next Story
    ×