search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.ஐ. புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்
    X

    சி.பி.ஐ. புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமனம்

    சி.பி.ஐ. இயக்குனருக்கும், சிறப்பு இயக்குனருக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ள நிலையில் சி.பி.ஐ.யின் புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். #CBIVsCBI #CBIExtortionClaim
    புதுடெல்லி:

    மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குனரான அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில், சி.பி.ஐ.யின் புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சி.பி.ஐ. இயக்குனருக்கும், சிறப்பு இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவை தற்காலிக சி.பி.ஐ. இயக்குநராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான வழக்கில் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மொயின் குரேஷி மீதான வழக்கை ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. அவ்வழக்கில், ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் சதீஷ் சனா மீது சந்தேகம் எழுந்தது.



    அவரை வழக்கில் இருந்து விடுவிக்க அலோக் வர்மா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக மந்திரிசபை செயலாளருக்கு ராகேஷ் அஸ்தானா கடந்த ஆகஸ்டு 24-ந் தேதி கடிதம் எழுதினார். அந்த கடிதம், ஊழல் கண்காணிப்பு ஆணையரின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, சதீஷ் சனாவை விடுவிக்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இவ்வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையாக சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமாரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. சதீஷ் சனாவின் வாக்குமூலத்தை பதிவு செய்வதில் மோசடி செய்ததாக அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுபோல், சிறப்பு புலனாய்வு குழுவில் உள்ள மற்றவர்களுக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என்று சி.பி.ஐ. ஆராய்ந்து வருகிறது. #CBI #NageswaraRao #CBIVsCBI #CBIExtortionClaim #CBIvsAlokVerma 

    Next Story
    ×