search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்பத்திரியில் இருந்தவாறு கோப்புகளை பார்க்கும் கோவா முதல்வர்- உடல்நிலை தேறி வருவதாக தகவல்
    X

    ஆஸ்பத்திரியில் இருந்தவாறு கோப்புகளை பார்க்கும் கோவா முதல்வர்- உடல்நிலை தேறி வருவதாக தகவல்

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கோவா முதல் மந்திரியின் உடல்நிலை தேறி வருவதாகவும் கோப்புகளில் அவர் கையொப்பமிடுவதாகவும் தெரியவந்துள்ளது. #ManoharParrikar #Goaminister
    புதுடெல்லி:

    ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
     
    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று சமீபத்தில் கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் கடந்த 15-ம் தேதி மனோகர் பரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    மனோகர் பரிக்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கடந்த 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என கோவாவில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் குறிப்பிட்டிருந்தார்.

    எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த மந்திரி ஒருவரிடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த கோவா பா.ஜ.க. தலைவர் வினய் தெண்டுல்கர், கோவா முதல் மந்திரி பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மனோகர் பரிக்கர் முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார் என அறிவித்தார்.

    இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கோவா முதல் மந்திரியின் உடல்நிலை தேறி வருவதாகவும் கோப்புகளில் அவர் கையொப்பமிடுவதாக கோவா பொதுப்பணித்துறை மந்திரி சுதின் தவலிக்கர் இன்று தெரிவித்துள்ளார்.

    அவருடைய துறைசார்ந்த அனைத்து கோப்புகளை படித்துப் பார்த்து மனோகர் பரிக்கர் உடனடியாக கையொப்பமிட்டு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் எங்களுக்கு அனுப்பி வைக்கிறார். இதுவரை எந்த கோப்பும் நிலுவையில் இல்லை.

    முதல் மந்திரியின் உத்தரவின்படி வாரந்தோறும் மந்திரிசபை கூட்டம் நடத்தி பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக முடிவு எடுக்கப்படுகிறது. இந்த முடிவுகள் அறிக்கையாக முதல் மந்திரிக்கு அனுப்பி வைக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். #ManoharParrikar #Goaminister
    Next Story
    ×