search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார், இரு சக்கர வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு நாளை முதல் அமல்
    X

    கார், இரு சக்கர வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு நாளை முதல் அமல்

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து கார், இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை நாளை முதல் அதிகரிக்கிறது.
    புதுடெல்லி :

    இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி ஆணையம் (இர்டாய்) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மோட்டார் வாகன சட்டப்படி மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் (காப்பீடு) கட்டாயம் ஆகும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, நாளை (செப்டம்பர் 1-ந் தேதி) முதல் விற்பனை ஆகும் புதிய கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு நீண்டகால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டம் கட்டாயம் ஆகிறது.

    இந்த நீண்டகால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டம் கார்களை பொறுத்தவரை 3 ஆண்டுகளாகவும், இரு சக்கர வாகனங்களை பொறுத்தவரை 5 ஆண்டுகளாகவும் இருக்கும். இதை அனைத்து பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களும் செயல்படுத்த வேண்டும்.

    அதன்படி, 1,000 சி.சி.க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.5,286 ஆகும். 1,000 முதல் 1,500 சி.சி. வரையிலான என்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு தொகை ரூ.9,534 என்றும், 1,500 சி.சி.க்கும் அதிகமான என்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.24,305 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இரு சக்கர வாகனங்களை பொறுத்தவரை, என்ஜின் திறன் 75 சி.சி.க்கு குறைவான வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.1,045 ஆகும். 75 முதல் 150 சி.சி. வரையிலான என்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.3,285 ஆகவும், 150 முதல் 350 சி.சி. வரையிலான என்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.5,453 ஆகவும், 350 சி.சி.க்கும் அதிகமான என்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.13,034 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த நீண்ட கால இன்சூரன்ஸ் திட்டத்தின் காரணமாக பொதுவாக கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விலை உயரும். ஆனால் 1,000 சி.சி.க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட கார்கள் மற்றும் 75 சி.சி.க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களின் விலை குறையும்.
    Next Story
    ×