search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டின் நலன் வி‌ஷயத்தில் யாருக்கும் வளைந்து கொடுக்காதவர் வாஜ்பாய்
    X

    நாட்டின் நலன் வி‌ஷயத்தில் யாருக்கும் வளைந்து கொடுக்காதவர் வாஜ்பாய்

    வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது எந்த சமயத்திலும் யாருக்காகவும் நாட்டின் நலன் சார்ந்த விஷயத்தில் வளைந்து கொடுக்காமல் செயல்பட்டார். #AtalBihariVajpayee
    புதுடெல்லி:

    வாஜ்பாய் 1957-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக பாராளுமன்றத்தில் எம்.பி. யாக நுழைந்தார்.

    அப்போது ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தார். அவர், வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவர்களோடு எம்.பி.க்கள் குழுவும் சென்றது.

    அதில், இளம் எம்.பி.யான வாஜ்பாயும் இருந்தார். வாஜ்பாயின் வித்தியாசமான செயல்பாடுகளை கவனித்த நேரு, இவர் ஒரு நாள் பிரதமராக வருவார் என்று கூறினார்.

    ஆனால், அன்று நேரு சொன்னது போலவே பிற்காலத்தில் இந்த நாட்டின் பிரதமர் ஆகி இந்திய பிரதமர்களிலேயே மாபெரும் சாதனை செய்தவர் என்ற பெருமையையும் சேர்த்தார்.

    பொதுவாக வாஜ்பாயின் நடவடிக்கைகள் மிக மிருதுவான மனிதராகத்தான் வெளியுலகுக்கு காட்டும். இதை நினைத்து அவரை தவறாக எடை போட்டவர்களும் உண்டு.

    அவ்வாறு தவறான எடை போட்டவர்கள்தான் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், முன்னாள் அதிபர் மு‌ஷரப். அவர்கள் இருவருமே வாஜ்பாயை சாதாரணமாக நினைத்து கொண்டு இந்தியாவோடு வாலாட்டி பார்த்தார்கள்.

    பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர் போன்றவற்றின் மூலம் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார்.

    வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அமெரிக்கா கூட வாஜ்பாயை சாதாரணமாக எடை போட்டது.

    உலகில் பல நாட்டு தலைவர்களை தாங்கள் ஆட்டுவிக்கும் பொம்மைகள் போல் நடத்துவது அமெரிக்காவுக்கு வாடிக்கையான ஒன்று.

    அதுபோல்தான் வாஜ்பாய் பிரதமராக இருந்த போதும் நாம் சொல்வதை எல்லாம் வாஜ்பாய் கேட்பார் என்ற எண்ணத்துடன் அமெரிக்கா செயல்பட்டது.

    ஈராக்குடன் போரில் ஈடுபட்ட அமெரிக்கா பல நாடுகளையும் தங்களோடு போரில் இணைத்து கொண்டது.

    அதே போல் இந்தியாவையும் போரில் ஈடுபட வைக்க முயற்சித்தது. ஆனால், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அமெரிக்காவின் சூழ்ச்சி வலையில் சிக்கவில்லை. போருக்கு படையை அனுப்ப மறுத்து விட்டார்.

    இதனால் அமெரிக்காவிடம் இருந்து பல எதிர் விளைவுகள் வந்தன. அதையும் வெற்றிகரமாக சமாளித்தார். பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியதால் அமெரிக்கா அதை காரணம் காட்டி அமெரிக்கா நமக்கு தொல்லை கொடுத்தது. அதையும் சமாளித்தார்.

    இந்தியாவை எப்போதுமே எதிரி நாடாக பாவித்து வரும் சீனாவின் தொல்லை வாஜ்பாய் காலத்திலும் இருந்தது. அதையும் வெற்றிகரமாக எதிர்கொண்டார்.

    அவருடைய செயல்பாடுகள் நாட்டு நலன் வி‌ஷயத்தில் யாருக்கும் வளைந்து கொடுக்காதவர் என்பதை காட்டியது.

    அது மட்டும் அல்ல, பகை நாடுகளான பாகிஸ்தான், சீனாவுடன் எப்போதும் கடுகடுப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் வாஜ்பாயிடம் இருந்ததில்லை.

    உறவுக்கு கை கொடுப்போம் என்பது போல் இவராகவே தானாக முன்வந்து இரு நாடுகளிடமும் சமரச பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டார்.

    அதன்படி லாகூருக்கு பஸ் பயணம் மேற்கொண்டு இரு நாடுகளுக்கும் இடையே பஸ் போக்குவரத்தை தொடங்கினார்.



    கார்கில் போருக்கு காரணமாக இருந்த மு‌ஷரப்பையே நமது நாட்டுக்கு அழைத்து வந்து சமரச பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

    வாஜ்பாய் கொடுத்த அழுத்தத்தினால் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டிய நிலை மு‌ஷரப்புக்கு ஏற்பட்டது.

    சீனாவுக்கு பயணம் செய்த வாஜ்பாய், பழைய பகைகளை எல்லாம் மறந்து விட்டு வர்த்தக ரீதியான உறவுகளை மேம்படுத்த முன்வந்தார்.

    2003-ல் இந்தியா- சீனா இடையேயான வர்த்தகம் ரூ.40 ஆயிரம் கோடியாக இருந்தது.

    தற்போது ரூ.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு வித்திட்டவர் வாஜ்பாய்.

    வெளிநாட்டு விவகாரங்களில் மிகத்துல்லியமான அறிவுத்திறன் கொண்டவர். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது கூட வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பாக வாஜ்பாயுடன்தான் அடிக்கடி கருத்துக்களை கேட்டு வந்தார்.

    மிகச்சிறந்த அரசியல் ராஜ தந்திரமும் அவரிடம் உண்டு. இந்தியாவில் மிகச் சிறிய கட்சிகளில் ஒன்றாக ஜனசங்கம் இருந்து வந்தது. பின்னர் பா.ஜனதாவாக உருவெடுத்த இந்த கட்சி 2 எம்.பி.க்களை மட்டுமே கொண்டு இருந்தது.

    அந்த கட்சி நாட்டையே ஆளும் அளவுக்கு வந்தது என்றால் அதற்கு முழு காரணமாக வாஜ்பாய் இருந்தார்.

    முதலில் அவர் ஆட்சிக்கு வந்து 13 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்தார். அடுத்து 13 கட்சி கூட்டணியுடன் தேர்தலை சந்தித்து ஆட்சிக்கு வந்தார். 13 மாதம் மட்டுமே ஆட்சி நீடித்தது.

    ஆனாலும், வாஜ்பாய் மீது கொண்ட நம்பிக்கையால் மக்கள் வாக்குகளை அள்ளி குவித்தனர். இதன் காரணமாக மீண்டும் ஆட்சிக்கு வந்த அவர், தொடர்ந்து 5 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தார்.

    அதற்கு முன்பு வரை காங்கிரஸ் அல்லாத கட்சிகள் நாட்டில் நிலையான ஆட்சியை தர முடியாது என்ற எண்ணமே இருந்தது.

    ஆனால், அதை வாஜ்பாய் முறியடித்து காட்டினார். ஏராளமான கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைந்த போதும் எல்லோரையும் சமாளித்து மிக சாதுர்யமாக ஆட்சியை நடத்தினார்.

    பாராளுமன்ற வரலாற்றிலேயே மிகச் சிறந்த பேச்சாளர் என்ற பெருமை வாஜ்பாய்க்கு உண்டு. பாராளுமன்ற பேச்சானாலும் சரி, வெளி மேடை பேச்சானாலும் சரி, அவரது பேச்சு எல்லோரையும் கவருவதாக இருக்கும்.

    ஒரு கதை சொல்வது போல் தனது பேச்சை வடிவமைத்துக்கொள்வார். அத்தனை பேரையும் தனது பேச்சோடு ஒன்றிணைய செய்து விடுவார். ஏற்ற, இறக்கங்களுடன் தலையை அங்குமிங்கும் அசைத்து அவர் பேசுவதே வித்தியாசமாக இருக்கும்.

    வாழ்நாளில் யாரும் அவரை விரல் நீட்டி குறை சொல்ல முடியாத நபராக வாழ்ந்து மறைந்து இருக்கிறார், நமது தலைவர் வாஜ்பாய். #AtalBihariVajpayee

    Next Story
    ×