search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலுடன் 11 மாநில சட்டசபைக்கு தேர்தல் நடத்த வாய்ப்பு - தேர்தல் கமி‌ஷன் தயார்
    X

    பாராளுமன்ற தேர்தலுடன் 11 மாநில சட்டசபைக்கு தேர்தல் நடத்த வாய்ப்பு - தேர்தல் கமி‌ஷன் தயார்

    பாராளுமன்ற தேர்தலுடன் 11 மாநில சட்ட சபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமி‌ஷன் தயாராகி வருகிறது. #SimultaneousElections #ElectionCommission

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கும் மாநில சட்டசபைகளுக்கும் தனி தனியாக தேர்தல் நடத்துவதால் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது.

    இந்த செலவை குறைத்தால் மீதமாகும் பணத்தை பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு செலவிட முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.

    இதையடுத்து “ஒரு தேசம் ஒரு தேர்தல்” என்ற கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கூறி வருகிறது. அதன் பரிந்துரையை ஏற்று சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையம் மிகப்பெரிய ஆய்வை நடத்தியது. அதில் ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தினால் கூடுதலாக எத்தனை லட்சம் மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் தேவைப்படும் என்ற கணக்கீடு செய்யப்பட்டது.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இருந்து “ஒரு தேசம், ஒரு தேர்தல்” திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்று தேர்தல் கமி‌ஷன் கூறியது. ஆனால் இந்த திட்டத்தை இதுவரை பெரும்பாலான கட்சிகள் ஏற்கவில்லை. இதனால் ஒரே நேரத்தில் தேர்தல் திட்டத்துக்கு இது வரை ஒருமித்த கருத்து உருவாகவில்லை.


    இந்த நிலையில் பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஜூன் மாதம் 3-ந்தேதியுடன் பதவிக் காலம் முடிவதால் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமி‌ஷன் தயாராகி வருகிறது. ஆனால் அந்த தேர்தலுக்கு முன்னதாக வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பதவிக் காலம் முடிய உள்ள மிசோராம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டியதுள்ளது.

    இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, தெலுங்கானா, அருணா சலபிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தல் முடிந்த அடுத்த 6 மாதத்தில் அரியானா, ஜார்க்கண்ட், மராட்டியம் ஆகிய 3 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரை 11 மாதங்களில் 12 மாநிலங்களுக்கு 3 கட்டமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும் இந்த செலவை குறைக்க பாராளுமன்ற தேர்தலுடன் 11 மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று பாரதிய ஜனதா கட்சி பரிந்துரைத்துள்ளது.

    “ஒரு தேசம் ஒரு தேர்தல்” திட்டத்தின் முதல்படியாக பாராளுமன்ற தேர்தலுடன் 11 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தி விட வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையமும் பாராளுமன்ற தேர்தலுடன் 11 மாநில சட்ட சபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தன்னை தயார்படுத்தி வருகிறது.

    இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ள மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் இப்போதே பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் தொடங்கி விட்டனர். பாராளுமன்ற தேர்தலுடன் இந்த 4 மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்த வேண்டுமானால் இந்த 4 மாநிலங்களிலும் டிசம்பர் மாதத்துக்கு பிறகு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டியதிருக்கும்.


    அது போல அரியானா, ஜார்க்கண்ட், மராட்டியம் ஆகிய 3 மாநிலங்களிலும் 6 மாதத்துக்கு முன்பே ஆட்சியை கலைத்து விட்டு, முன்பே தேர்தல் நடத்த வேண்டும். இந்த 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி நடப்பதால், முன் கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு வசதியாக எளிதில் ஆட்சியை கலைக்க முடியும்.

    ஆனால் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்துக்கு இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை.

    இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா, சிக்கிம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்யத் தொடங்கியுள்ளது. இதற்காக 17 லட்சத்து 40 ஆயிரம் மின்னணு எந்திரங்களுக்கு தேர்தல் ஆணையம் ஆர்டர் கொடுத்துள்ளது. இன்னும் 3 மாதங்களில் அவை தயாராகி வந்து விடும்.

    பாராளுமன்றத்துக்கும் அனைத்து மாநில சட்ட சபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் சுமார் 80 லட்சம் எந்திரங்கள் தேவைப்படும். 11 மாநில சட்டசபைக்கும், பாராளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமானால் சிறிதளவு கூடுதல் எந்திரங்களை வர வழைத்து ஓட்டுப்பதிவை நடத்தி விட முடியும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    ஆனால் இவையெல்லாம் பரிந்துரை செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளன. அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த மனதுடன் முன் வந்தால் மட்டுமே “ஒரு தேசம் ஒரு தேர்தல்” திட்டம் வெற்றி பெறும்.

    Next Story
    ×