search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாமதமாக செல்லும் ரெயில்களை தேவைக்கேற்ப கூடுதல் வேகத்தில் இயக்க டிரைவர்களுக்கு அனுமதி
    X

    தாமதமாக செல்லும் ரெயில்களை தேவைக்கேற்ப கூடுதல் வேகத்தில் இயக்க டிரைவர்களுக்கு அனுமதி

    ரெயில்கள் தாமதமானால் பயணிகள் வசதிக்காக இழப்பு நேரத்தை சரிகட்ட தற்போதைய வேகத்தை விட கூடுதல் வேகத்தில் ரெயில்களை இயக்க எஞ்சின் டிரைவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. #Railways
    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றான இந்திய ரெயில்வே நாளொன்றுக்கு சராசரியாக 2.5 கோடி பயணிகளை கையாளுகிறது. இது ஆஸ்திரேலியா நாட்டின் மக்கள் தொகைக்கு சமமான ஒன்றாகும். இந்நிலையில், கடந்த ஓராண்டில் 30 சதவிகித ரெயில்கள் தாமதமாக வந்துள்ளன.

    ரெயில்கள் தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக கூறப்பட்டாலும், பயணிகள் இந்த தாமதத்தால் பெரிதும் அவதிப்படுகின்றனர். சங்கிலித்தொடர் போல இந்த தாமதம் அவர்களின் திட்டங்களிலும் இடையூறை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், ஒரு ரெயில் தாமதமானால் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட கூடுதல் வேகத்தில் அந்த ரெயிலை இயக்க எஞ்சின் டிரைவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    ஒரு ரெயிலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 130 கி.மீ என எடுத்துக்கொண்டால், அந்த ரெயில் சராசரியாக 80 முதல் 90 கி.மீ வேகத்தில் இயங்கும். இது போக, குறிப்பிட்ட வழித்தடத்தில் ரெயில்கள் இந்த வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்ற விதிகளும் இருக்கும். 

    அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட கூடுதல் வேகத்தில் ரெயிலை இயக்கினால் தண்டனை என்ற நிலை இருந்ததால், எஞ்சின் டிரைவர்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்தை கூட நெருங்காமலே ரெயிலை ஓட்டி வந்தனர். 

    தற்போது, தாமதமாகும் ரெயில்களின் இழப்பு நேரத்தை சரிகட்ட அனுமதிக்கப்பட்ட வேகத்தை நெருங்க எஞ்சின் டிரைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதாவது, ஒரு ரெயிலின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வேகம் 110 கி.மீ என்றால் 105 கி.மீ வேகம் வரை தேவைக்கேற்ப செல்லலாம்.

    இந்த புதிய நடைமுறை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ரெயில்வே தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×