search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களவை துணை சபாநாயகரை தேர்வு செய்ய காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை
    X

    மாநிலங்களவை துணை சபாநாயகரை தேர்வு செய்ய காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை

    பாராளுமன்ற மாநிலங்களவை துணை சபாநாயகர் பதவிக்கு வரும் 9-ம் தேதி நடைபெறும் தேர்தலில் வேட்பாளரை அறிவிக்க காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்துகின்றன. #RSdeputychairman #RSdeputychairmanelection
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையின் சபாநாயகராக துணை ஜனாதிபதி பதவி வகிப்பது மரபாக உள்ளது. துணை சபாநாயகர் பதவிக்கு அவையின் எம்.பி.க்கள் பலத்துக்கேற்ப வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவது வழக்கம்.

    அறிவிக்கப்பட்ட நபரை எதிர்த்து மாற்று கட்சி வேட்பாளர் சில வேளைகளில் நிறுத்தப்பட்டு, அதிகமான வாக்குகளை பெறுபவர் வெற்றிபெற்று மாநிலங்களவை துணை சபாநாயகராக பதவி ஏற்பார்.

    சில வேளைகளில் அனைத்து கட்சிகளின் சார்பிலும் ஆலோசித்து, ஒருமித்த முடிவுடன் பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டு துணை சபாநாயகராக பதவி ஏற்பதும் உண்டு.

    இப்படி, மாநிலங்களவையில் அதிக உறுப்பினர்களின் பலத்துடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்தான் அதிக முறை துணை சபாநாயகராக பொறுப்பு வகித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில், துணை சபாநாயகராக இருமுறை பதவி வகித்த பி.ஜே.குரியன் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதம் இரண்டாம் தேதியுடன் முடிவடைந்தது. 

    இதையடுத்டு, துணை சபாநாயகர் பதவிக்கு அனைத்து கட்சிகளின் சார்பாக ஒரு பொது வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் முயற்சித்து வருகின்றன.

    இன்றைய மாநிலங்களவ கூட்டத்தின்போது  துணை சபாநாயகர் தேர்தல் வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என சபாநாயகர் வெங்கயா நாயுடு இன்று தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள நபர்கள் இந்த பதவிக்கு பெயர்களை முன்மொழியலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    8-ம் தேதி வேட்புமனு தாக்கலும் 9-ம் தேதி காலை 11 மணியளவில் வாக்குப்பதிவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாமல் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படாமல் போனால், வழக்கம்போல் இந்த முறையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் இந்த பதவிக்கு வரும் வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகள் வேட்பாளர் தேர்வு தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. 

    நாளை காலை 9.30 மணியளவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத இதர எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் கட்சி தலைவர்கள் இன்று மாலை டெல்லியில் கூடி அவசர ஆலோசனை நடத்தினர்.

    இந்த கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ராம்கோபால் யாதவ், தேசியவவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரஃபுல் பட்டேல், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் டெரெக் ஓ’ பிரியென் மற்றும் தி.மு.க. சார்பில் திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நாளையும் இந்த கட்சியினர் ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்த ஆலோசனையின்போது காங்கிரஸ் முன்னிறுத்தும் வேட்பாளரை ஆதரிப்பதா? அல்லது, தங்கள் சார்பில் தனியாக வேட்பாளரை முன்னிறுத்துவதா? என்று இறுதி முடிவு எட்டப்படும் என தெரிகிறது. #RSdeputychairman #RSdeputychairmanelection #oppositionleadersMeet
    Next Story
    ×