என் மலர்
செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் காந்தி சிலையையும் விட்டு வைக்காத காவி நிறம்
உத்தரப்பிரதேசத்தில் அரசு கட்டிடங்களை தொடர்ந்து, காந்தி சிலைக்கும் காவி நிறம் அடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #GandhiStatuePaintedSaffron
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து அரசு கட்டிடங்கள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களுக்கு காவி நிற பெயிண்ட் அடிக்கப்பட்டு வருகிறது.
சட்டசபை, காவல் நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு யோகி ஆட்சிக்கு பிறகு காவி நிறம் அடிக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டாக்டர் அம்பேத்கர் சிலைகளுக்கும் சில இடங்களில் காவி நிறம் அடிக்கப்பட்டு, சர்ச்சை எழுந்ததையடுத்து நிறம் மாற்றப்பட்டது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளியில் உள்ள காந்தி சிலைக்கும் காவி நிறம் அடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி. மாநிலம் சஹஜஹான்பூர் மாவட்டத்தின் பண்டா தேசில் பகுதியில் உள்ள தாகா கன்ஷியாம்பூர் கிராமத்தில் தொடக்க பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் காந்தி சிலை அமைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதையடுத்து, அந்த சிலைக்கு புது வண்ணம் அடிக்க வேண்டும் என முடிவானது. அதன்படி, காந்தி சிலைக்கு காவி நிறம் அடிக்கப்பட்டது. இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, உள்ளூர் காங்கிரசார் பள்ளி நிர்வாகம் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர். #GandhiStatuePaintedSaffron
Next Story






