search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசாமில் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கி உள்ளனர் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
    X

    அசாமில் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கி உள்ளனர் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

    அசாம் மாநிலத்துக்கான தேசிய குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் இந்தியர்களின் பெயர் விடுவிக்கப்பட்டிருப்பதால் அங்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கி இருப்பதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். #AssamNRC
    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில் வங்காளதேசத்தை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் ஊடுருவி குடியிருந்து வருகிறார்கள். அவர்களில் பலர் இந்திய குடியுரிமை பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆனால் சட்டவிரோதமாக குடியேறிய அவர்கள் மோசடி செய்து இவ்வாறு குடியுரிமை பெற்றதாக புகார் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் உண்மையான அசாம் மக்கள் யார், வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள் யார்? என்பதை கண்டறிவதற்காக தேசிய குடிமக்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் இறுதி வரைவு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

    அதில் 40 லட்சம் பேர் இந்தியர் அல்லாதவர் என்று காட்டப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் இறுதி பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அவர்கள் வெளிநாட்டினராக கருதப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெறாதவர்கள் பலர் காலம் காலமாய் அசாமை சேர்ந்தவர்களாவார். ஆனாலும் அவர்கள் பெயரும் இடம்பெறவில்லை. 2 எம்.எல்.ஏ.க்கள் பெயரும் விடுபட்டுள்ளது.

    இந்த பட்டியல் தயாரிப்பில் ஏற்பட்ட குளறுபடிதான் இதற்கு காரணம் என்று புகார் கூறப்படுகிறது. 40 லட்சம் பெயர் பட்டியலில் இல்லை என்பதால் அங்கு வன்முறை வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


    இதுசம்பந்தமாக காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த பட்டியல் சம்பந்தமாக இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    தேசிய குடியுரிமை பட்டியல் வெளியீடு தொடர்பாக அசாமில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளன. உண்மையான இந்திய குடிமகன்கள் பலருடைய பெயர்கள் விடுபட்டுள்ளது. இதன்மூலம் அங்கு ஒரு அபாயகரமான சூழ்நிலை உருவாகி உள்ளது. பாதுகாப்பாற்ற நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த பட்டியல் தயாரிப்பதற்காக ரூ.1200 கோடி செலவிட்டுள்ள நிலையில் அது சரியாக செய்யப்படவில்லை.

    மெத்தன போக்கில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு மிக முக்கியமான விவகாரத்தில் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வுகாண அரசு முயற்சிக்க வேண்டும்.

    எங்கள் ஆட்சியில் மன்மோகன்சிங் ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அதில் உள்ள அம்சங்கள் பலவும் நீக்கப்பட்டு தவறான நோக்கத்தோடு பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #AssamNRC #RahulGandhi #Congress
    Next Story
    ×