search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ரூ.5 ஆயிரம் கோடி செலவாகும் - தேர்தல் ஆணையம் தகவல்
    X

    ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ரூ.5 ஆயிரம் கோடி செலவாகும் - தேர்தல் ஆணையம் தகவல்

    பாராளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ரூ.5 ஆயிரம் கோடி செலவாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. #SimultaneousElections #ElectionCommission

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) தேர்தல் நடத்தப்படும் போது மாநில சட்டசபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த மத்தியில் ஆளும் பா.ஜ.க. விரும்புகிறது.

    இது தொடர்பாக மத்திய சட்ட ஆணையம் கடந்த வாரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டது. அப்போது 4 கட்சிகள் மட்டுமே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன. 11 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்த நிலையில் சட்ட ஆணையத்துக்கு தலைமை தேர்தல் ஆணையமும் பதில் அளித்துள்ளது. அதில் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட என்னென்ன செய்ய வேண்டும், எவ்வளவு செலவாகும் என்பன போன்ற விபரங்கள் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக ஓட்டுப்பதிவு நடத்த ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 2 மடங்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி அதிகாரிகள், ஊழியர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க கால அவகாசம் தேவைப்படும். அதற்கும் கணிசமான தொகை செலவாகும்.

     


    ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் கூடுதலாக பல லட்சம் எந்திரங்கள் வாங்கப்பட வேண்டும். அப்படி கூடுதலாக மின்னணு எந்திரங்கள் வாங்குவதற்கு மட்டும் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தனது பதிலில் சுட்டிக்காட்டியுள்ளது.

    பொதுவாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை 3 தேர்தலுக்குத்தான் பயன்படுத்த முடியும். அதன் பிறகு புதிய எந்திரங்கள் வாங்க வேண்டும். எனவே 15 ஆண்டுகளுக்கு ஒரு தடவை எந்திரங்களுக்கே சில ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்.

    மேலும் வரும் ஆண்டுகளில் ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. எனவே மின்னணு எந்திரங்கள் தேவை அதிகரிக்கும். அதற்கும் கூடுதல் செலவாகும்.

    2024-ம் ஆண்டு தேர்தலின் போது மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக கூடுதலாக 12 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்க வேண்டியதிருக்கும். அப்போது மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்கள் வாங்குவதற்கே சுமார் ரூ.14 ஆயிரம் கோடி தேவைப்படும் என்று சட்ட ஆணையத்திடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×