search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பையில் கன மழை- ஓடுபாதை வழுக்கியதால் புல்வெளியில் பாய்ந்த விமானம்
    X

    மும்பையில் கன மழை- ஓடுபாதை வழுக்கியதால் புல்வெளியில் பாய்ந்த விமானம்

    மும்பை விமான நிலையத்தில் மழை பெய்துகொண்டிருந்தபோது தரையிறங்கிய விமானம், ஓடுபாதையை விட்டு தாண்டிச் சென்று புல்வெளியில் தரையிறங்கியது. #MumbaiRains #MHRains
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் ஜூன் மாதம் முதல் பருவ மழை பெய்து வருகிறது. இந்த மழை தற்போது தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக மும்பை, அதன் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், ரெயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து அடியோடு முடங்கியுள்ளது.

    இதேபோல் விமான நிலையம் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. இந்த விமான நிலையம் இப்போது படகுகள் செல்லும் துறைமுகமாக மாறியிருப்பதாக டுவிட்டரில் சிலர் பதிவிட்டுள்ளனர்.

    மழை பெய்துகொண்டிருந்தபோது, விஜயவாடாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஆனால், மழை காரணமாக ஓடுபாதை அதிக அளவில் வழுக்கியது. இதனால் விமானம் ஓடுபாதையை தாண்டி 10 அடி தூரம் சென்று புல்வெளியில்  நின்றது. எனினும் விமானத்திற்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. எனவே, அதில் இருந்த 82 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    ஓடுபாதை இந்த அளவுக்கு வழுக்கும் நிலைமையில் வைத்திருந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.



    நாலா சோபாரா மற்றும் வசாய் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் தண்டவாளத்தில் மழைநீர் 2 மீட்டர் உயரத்திற்கு தேங்கியதால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. பின்னர் படகுகள் மூலம் பயணிகள் மீட்கப்பட்டனர். நாலா சோபாரா ரெயில் நிலையத்தில் சிக்கிய பயணிகளை மீட்க கடற்படை வீரர்கள் இன்று வரவழைக்கப்பட்டுள்ளனர். #MumbaiRains #MHRains
    Next Story
    ×