என் மலர்
செய்திகள்

காஷ்மீர் சென்றார் ராஜ்நாத் சிங் - அமர்நாத் ஆலயத்தில் நாளை தரிசனம்
காஷ்மீரில் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ஸ்ரீநகர் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கவர்னர் வோராவுடன் ஆலோசனை நடத்தினார். #RajnathinJK #RajnathinAmarnath
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பா.ஜ.க. சமீபத்தில் விலக்கி கொண்டது. இதைதொடர்ந்து அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்ந்தது.
கவர்னர் வோரா தலைமையில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இருநாள் பயணமாக இன்று மாலை காஷ்மீர் வந்தடைந்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், உள்துறை செயலாளர் ராஜிவ் கவுபா உள்ளிட்ட உயரதிகாரிகளும் அவருடன் வந்துள்ளனர்.
ஸ்ரீநகரில் உள்ள விமானப்படை தளத்தில் கவர்னரின் ஆலோசகர்கள் பி.பி.வியாஸ், தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் ஆகியோர் ராஜ்நாத் சிங்கை வரவேற்றனர்.
வரவேற்புக்கு பிறகு கவர்னர் மாளிகைக்கு சென்ற ராஜ்நாத் சிங், அம்மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கவர்னர் வோரா மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நாளை அமர்நாத் ஆலயத்துக்கு செல்லும் அவர், அங்கு தோன்றியுள்ள பனி லிங்கத்தை தரிசிக்கிறார். ராஜ்நாத் சிங் வருகையையொட்டி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. #RajnathinJK #RajnathinAmarnath
Next Story