search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாவ மன்னிப்பு கேட்ட இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் - 5 பாதிரியார்கள் இடைநீக்கம்
    X

    பாவ மன்னிப்பு கேட்ட இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் - 5 பாதிரியார்கள் இடைநீக்கம்

    பாவ மன்னிப்பு கேட்ட இளம்பெண்ணை மிரட்டி பாலியல் உறவு வைத்துக்கொண்ட 5 பாதிரியார்களை கிறிஸ்தவ திருச்சபை இடைநீக்கம் செய்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவை சேர்ந்த ஒரு பெண், மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சிரியன் சபையை சேர்ந்த ஒரு தேவாலயத்தில் பாவ மன்னிப்பு கேட்கச்சென்று, 8 பாதிரியார்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாய் ஆவார்.

    அவர், தனது திருமணத்துக்கு முன்பே, தனது திருச்சபையை சேர்ந்த ஒரு பாதிரியாருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பாவ மன்னிப்பு கேட்டார். அவருக்கு பாவ மன்னிப்பு வழங்கிய பாதிரியார், அப்பெண் கூறியதை அவருடைய கணவரிடம் கூறி விடுவதாக மிரட்டி, அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    அந்த காட்சியை வீடியோ படமாக எடுத்து, மற்றொரு பாதிரியாருக்கு அனுப்பி வைத்தார். அதை வைத்து அந்த பாதிரியாரும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார். இதுபோன்று மொத்தம் 8 பாதிரியார்கள் அப்பெண்ணை சீரழித்ததாக தெரிகிறது.

    இதுதொடர்பாக, அவருடைய கணவர், மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சிரியன் சபை நிர்வாகத்திடம் புகார் செய்தார். அப்போது, அவருக்கும், நிர்வாகிக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் அடங்கிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, இந்த சர்ச்சை வெடித்தது.

    இதுதொடர்பாக, பெண்ணின் கணவர் கூறியதாவது:-

    என் மனைவியை ஒரு பாதிரியார் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சீரழித்துள்ளார். அந்த ஓட்டல் அறை, என் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ரசீது என் கண்ணில் பட்டதால், அதை வைத்து என் மனைவியிடம் கேட்டபோது, அவர் எல்லாவற்றையும் சொல்லி விட்டார்.

    மொத்தம் 8 பாதிரியார்கள் என் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஆனால், 5 பாதிரியார்கள் பற்றிய ஆதாரம் மட்டுமே என்னிடம் உள்ளது.

    இந்த விவகாரத்தை போலீசுக்கு கொண்டு சென்று, திருச்சபையின் புகழை கெடுக்க நான் விரும்பவில்லை. சம்பந்தப்பட்ட அனைத்து பாதிரியார்களும் சபையில் இருந்து நீக்கப்படும்வரை நான் ஓயப்போவதில்லை.

    புகாரை வாபஸ் பெறுமாறு சபை நிர்வாகிகளும், செல்வாக்கு படைத்த சிலரும் என்னை வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால், நான் பணிய மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கிறிஸ்தவ சபையின் 2 ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில், பாவ மன்னிப்பு கேட்பதற்காக கூறிய தகவலை பாதிரியார்களே தவறாக பயன்படுத்தியதாக புகார் வந்திருப்பது, இதுவே முதல்முறை என்று கிறிஸ்தவ சபை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய 5 பாதிரியார்களும் மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சிரியன் சபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் டெல்லி மறைமாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இதற்கான அறிவிப்பை சபையின் தலைவர் மார்த்தோமா பவுலோஸ் வெளியிட்டுள்ளார்.

    பாதிரியார்கள் மீதான புகாரை விசாரித்து, அதில் உண்மை இருந்தால், மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபையின் செய்தித்தொடர்பாளர் பி.சி.இலியாஸ் கூறினார்.

    இந்த சபையில் 30 மறைமாவட்டங்கள் உள்ளன. இவற்றில் 7 மாவட்டங்கள், வெளிமாநிலங்களிலும், 3 மாவட்டங்கள் வெளிநாடுகளிலும் உள்ளன. இந்த சபையின் பாதிரியார்கள், திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட அனுமதி உண்டு. நீக்கப்பட்ட பாதிரியார்கள், திருமணம் ஆனவர்களா? இல்லையா? என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

    இந்த சூழ்நிலையில், பாதிரியார்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து குற்றப்பிரிவு விசாரணைக்கு போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெகரா நேற்று உத்தரவிட்டார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜித் தலைமையில் இந்த விசாரணை நடைபெறும்.

    முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தன், தேசிய மகளிர் ஆணையம் ஆகியோரின் கோரிக்கையை தொடர்ந்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×