search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைப்போம் - பெல்ஜியம் தூதர் உறுதி
    X

    நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைப்போம் - பெல்ஜியம் தூதர் உறுதி

    நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு நாங்கள் எப்போதும் ஒத்துழைப்போம் என பெல்ஜியம் நாட்டு தலைமை தூதர் ஜான் லுயுக்ஸ் தெரிவித்துள்ளார். #NiravModi
    கொல்கத்தா:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதில், சி.பி.ஐ., பொருளாதார அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர் என 3 தரப்பினரும் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே நிரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து ரூ.5,714 கோடி முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் 141 வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர்.

    நிரவ் மோடி நிறுவனங்களின் டெபாசிட்டுகள், பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ரூ.94 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது. நிரவ் மோடி குழுமத்துக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் மதிப்புடைய 21 சொத்துகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

    தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமினில் விட முடியாத கைது உத்தரவை பிறப்பித்துள்ளது.

    இதற்கிடையில், பிரிட்டன் நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ள தனது நகைக்கடையின் மாடியில் உள்ள வீட்டில் குடியிருந்த நிரவ் மோடி, அங்கிருந்து பெல்ஜியம் நாட்டுக்கு தப்பியோடி அந்நாட்டின் குடியுரிமை பெற முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரிட்டன் மற்றும் பெல்ஜியம் அரசுகளுக்கு இந்திய பொருளாதார அமலாக்கத்துறை வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில், நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைப்போம் என இந்தியாவுக்கான பெல்ஜியம் நாட்டு தலைமை தூதர் இன்று தெரிவித்துள்ளார்.

    கொல்கத்தா நகரில் நடைபெற்ற வர்த்தக சபை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்தியாவுக்கான பெல்ஜியம் நாட்டு தலைமை தூதர் ஜான் லுயுக்ஸ், தேடப்படும் நபர்களை ஒப்படைப்பது தொடர்பாக இந்தியா - பெல்ஜியம் இடையே ஏற்படுத்தப்பட்ட பழைய உடன்படிக்கை இன்றும் உயிரிப்புடன் உள்ளது. எங்கள் நாடு உடன்படிக்கைகளை மதிக்கும். பெல்ஜியத்தில் எப்போதுமே சட்டத்தின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு நாங்கள் எப்போதும் ஒத்துழைப்போம். எனினும், இவ்விவகாரத்தில் சில சட்ட நடைமுறைகள் உள்ளதால் அதை எல்லாம் கடந்துவர வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். #Belgiumcooperation #NiravModiextradition #NiravModi
    Next Story
    ×