search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேய், பிசாசுகள் பயத்தை போக்க சுடுகாட்டில் உண்டு, உறங்கிய எம்.எல்.ஏ
    X

    பேய், பிசாசுகள் பயத்தை போக்க சுடுகாட்டில் உண்டு, உறங்கிய எம்.எல்.ஏ

    சுடுகாட்டில் கட்டிட பணிகள் மேற்கொள்ள தொழிலாளர்கள் அச்சப்பட்ட நிலையில், அவர்களின் அச்சத்தை போக்க தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ சுடுகாட்டில் உண்டு, அங்கேயே கட்டில் போட்டு தூங்கியுள்ளார்.
    அமராவதி:

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகோல் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் நிம்மல ராம நாயுடு. தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இவர், தனது தொகுதியில் உள்ள பாலகோல் புறநகர் பகுதியில் இருக்கும் சுடுகாடு ஒன்றில் நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்டு அங்கேயே கட்டில் போட்டு தூங்கியுள்ளார்.

    அந்த சுடுகாடு கடந்த பல ஆண்டுகளாக யாரும் பயன்படுத்தாமல் சிதிலமடைந்து இருந்துள்ளது. இதனை அடுத்து, ராம நாயுடுவின் கோரிக்கையை ஏற்று மாநில அரசு சுடுகாட்டை புரணமைக்க ரூ.3 கோடி ஒதுக்கியது. ஆனாலும், இந்த திட்டத்திற்கு யாருமே டெண்டர் எடுக்கவில்லை.

    திட்டம் இழுபறியாக கிடந்த நிலையில், ஒரு ஒப்பந்தக்காரர் முன்வந்தார். பணிகள் தொடங்கிய நிலையில், அங்கு பேய், பிசாசு உலவுவதாக வந்த வதந்தியை அடுத்து தொழிலாளர்கள் யாரும் பணி செய்ய முன்வரவில்லை. இதனால், கடுப்பான எம்.எல்.ஏ ராம நாயுடு, நேற்று முன்தினம் கட்டிலுடன் சுடுகாட்டுக்கு வருகை தந்தார்.

    அங்கேயே இரவு உணவை முடித்த அவர், இரவு முழுவதும் அங்கேயே தூங்கினார். அவருடன் ஒரே ஒரு உதவியாளர் உடனிருந்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் தனது வீட்டுக்கு ராம நாயுடு புறப்பட்டுச்சென்றார். அவரது இந்த அதிரடிக்கு பலனாக 50 தொழிலாளர்கள் வேலை செய்ய தொடங்கினர்.

    இதனால், மகிழ்ச்சி அடைந்த ராம நாயுடு, “பேய், பிசாசு பயத்தை போக்கவே இங்கு தூங்கினேன். இனி மேலும் பலர் பயமில்லாமல் வேலை செய்ய வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து வசதிகளும் கொண்ட நவீன சுடுகாடாக இது மாற்றப்படும்.” என கூறியவர், கொசுக்கடி மட்டும் அதிகமாக இருந்தது என புகார் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×