search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதிக்கு வந்த கேரள பெண் டாக்டருக்கு நிபா வைரஸ் காய்ச்சல்
    X

    திருப்பதிக்கு வந்த கேரள பெண் டாக்டருக்கு நிபா வைரஸ் காய்ச்சல்

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்த பெண் டாக்டர், திருப்பதிக்கு வந்தபோது நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். #Nipahvirus

    திருப்பதி:

    கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. 18 பேர் பலியான நிலையில், மேலும் பலர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரளாவை சேர்ந்த ஒரு பெண் டாக்டரும் சிகிச்சை அளித்து வந்தார்.

    இவர், ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு நேற்று வந்தார். திடீரென அந்த பெண் டாக்டருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உறவினர்கள் மீட்டு திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    காய்ச்சல் ஏற்பட்ட பெண் டாக்டருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருந்ததால், உடனடியாக திருப்பதி ரூயா அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். பரிசோதனையில் பெண் டாக்டருக்கு நிபா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பெண் டாக்டரின் ரத்த மாதிரி புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆந்திர மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பில்லை என்பதால், பெண் டாக்டரை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ரூயா மருத்துவமனை இயக்குனர் பாப்ஜி, கண்காணிப்பாளர் நாயக், பெண் டாக்டருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை கவனித்து வருகின்றனர்.

    இதுகுறித்து கேரள அரசிற்கும், ஆந்திர மாநில சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நிபா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் உயரதிகாரிகள் அனுமதியின்றி வேறு மாநிலங்களுக்கு செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆனால், அந்த பெண் டாக்டர் அனுமதியின்றி ஆந்திராவிற்கு வந்ததாக கூறப்படுகிறது. கலெக்டர் பிரதியும்னா ரூயா ஆஸ்பத்திரிக்கு சென்று நிபா வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும் நிபா வைரஸ் காய்ச்சல் வேறு யாருக்கும் பராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். #Nipahvirus

    Next Story
    ×