search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு தனியாருக்கு கதவை திறந்து விட்டாலும் ஏர் இந்தியாவை வாங்க ஆளில்லை
    X

    மத்திய அரசு தனியாருக்கு கதவை திறந்து விட்டாலும் ஏர் இந்தியாவை வாங்க ஆளில்லை

    கடன் நெருக்கடியில் சிக்கிவரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயற்சித்த போதிலும், நாளையுடன் கெடு உள்ள நிலையில் யாரும் வாங்க முன் வரவில்லை. #AirIndia
    புதுடெல்லி:

    இந்தியாவில் முதல்முறையாக விமான சேவை நிறுவனத்தை டாடா குழுமம் தான் தொடங்கியது. பின்னர் 1953-ம் ஆண்டில் மத்திய அரசால் அந்நிறுவனம் கையகப்படுத்தப்பட்டு, ஏர் இந்தியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நாட்டின் மூன்றாவது பெரிய விமான நிறுவனமாக உள்ள ஏர் இந்தியா, தற்போது கடும் நஷ்டத்தில் இயங்கிவருகிறது.

    பெருகி வரும் நிர்வாக செலவுகள், லாபமற்ற வர்த்தக நடைமுறைகள் ஆகியவற்றால் சுமார் 52000 கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் ஏர் இந்தியா சிக்கியுள்ளது. இதனால், இந்நிறுவனத்தை மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்தது. 

    இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    ஆனால், ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உறுதியாக தெரிவித்தது.  ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்து தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்தது. 

    இதேபோல ஏர் இந்தியா சாட்ஸ் ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தில் 50% பங்குகளை விலக்கிக்கொள்வது தொடர்பான விளக்க அறிக்கையினையும் மத்திய அரசு வெளியிட்டது. 

    ஏர் இந்தியாவில் மத்திய அரசின் வசமுள்ள பங்குகளை வாங்க டாடா குழுமம், இண்டிகோ விமான நிறுவனம் ஆகியன முயற்சித்தன.
    ஆனால், அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.  இருப்பினும், பங்குகளை வாங்க விண்ணப்பிக்க மே 14-ம் தேதி இறுதி நாள் என்றும், மே 28-ம் தேதி தகுதி வாய்ந்த நிறுவனங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தது. ஆனால், எந்த நிறுவனமும் பங்குகளை வாங்க முன்வராததால், விண்ணப்பிப்பதற்கு இறுதி நாள் மே 31 என அறிவிக்கப்பட்டது. 

    இன்னும் ஒருநாளே, பங்குகளை கோருவதற்கான கால அவகாசம் உள்ள போதிலும், தற்போது வரை எந்த ஒரு நிறுவனமும் விண்ணப்பம் கோரவில்லை. 

    இந்த நிலையில், ஏர் இந்தியா பங்குகளை கோருவதற்காக விண்ணப்ப அவகாசம் இனியும் நீட்டிக்கப்படாது என்று விமான போக்குவரத்துதுறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.  யாரும் விண்ணப்பிக்காததால் ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசே தொடர்ந்து நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×