search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் மேலும் 6 பேருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறி
    X

    கேரளாவில் மேலும் 6 பேருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறி

    கேரளாவில் 6 பேருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளதையடுத்து, அவர்கள் கோழிக்கோடு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். #nipahvirus
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒருவித வைரஸ் காய்ச்சல் பரவியது.

    காய்ச்சல் பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்தபோது அவை நிபா வைரஸ் என தெரியவந்தது. இந்நோய் வேகமாக பரவும் தன்மை கொண்டதோடு, போதுமான தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டது.

    இதையடுத்து டெல்லியில் இருந்து மத்திய குழு மற்றும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் வந்து ஆய்வு நடத்தினர்.

    மத்திய குழு நோய் பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து நிபா வைரஸ் காய்ச்சல் பாதித்தவர்களுக்கு தனி வார்டுகள் அமைத்து அவர்களுக்கு சிறப்பு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.

    இருந்தும் கோழிக்கோடு ஆஸ்பத்திரியில் நிபா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த நர்சு லினி, நோயாளிகளை ஏற்றி சென்ற ஆட்டோ டிரைவர் அபின்(வயது 26) உள்பட 14 பேர் பலியானார்கள்.

    இவர்களை தவிர கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் 908 பேர் சிகிச்சைக்கு வந்தனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பூனா மற்றும் மணிப்பூரில் உள்ள நோய் ஆய்வு மைய பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதில் 6 பேருக்கு நோய் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே அவர்கள் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கோழிக்கோடு மாவட்டத்திற்கு கேரள சுகாதாரத்துறை மந்திரி சைலஜா மற்றும் டாக்டர்கள் குழுவினர் நேற்றும் சென்று ஆய்வு நடத்தினர். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

    இதுபற்றி மந்திரி சைலஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடந்து வருகிறது. மீண்டும் ஒரு முறை இது போன்ற நோய் பரவாமல் இருக்க என்னசெய்ய வேண்டும்? என்பது பற்றி சுகாதாரத்துறையுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக மாநில அரசின் சுகாதாரத்துறை மூலம் நிபா வைரஸ் குறித்து ஆய்வு நடத்தி தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #nipahvirus

    Next Story
    ×