search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.8 லட்சத்துக்கு மின்சார கட்டணம் - காய்கறி கடைக்காரர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    ரூ.8 லட்சத்துக்கு மின்சார கட்டணம் - காய்கறி கடைக்காரர் தூக்கு போட்டு தற்கொலை

    எட்டு லட்சம் ரூபாய்க்கு மின்சார கட்டணம் வந்ததால் மன வருத்தம் அடைந்த காய்கறி வியாபாரி தூக்கு போட்டு உயிரிழந்தது மகாராஷ்டிராவில் சோகத்தை ஏற்படுத்தியது. #ElectricityBill
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தின் புந்த்லிநகரில் உள்ள பாரத் நகரை சேர்ந்தவர் ஜெகநாத் ஷெல்கி (36). இவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தார். அவரது காய்கறி கடைக்கு மின்சார கட்டணமாக ஒவ்வொரு முறையும் ஆயிரம் ரூபாய் கட்டி வந்தார்.

    இந்நிலையில், இந்த மாத மின்சார கட்டணத்தை பார்த்தவர் அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு 8 லட்சம் ரூபாய்க்கு மின்சார கட்டணம் வந்திருந்தது. அதைக் கண்டதில் இருந்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். மின்சார வாரிய அலுவலகத்துக்கும் பலமுறை நடந்துள்ளார். ஆனால் எந்த பலனும் இல்லை. அவர்கள் அந்த தொகையை கட்டும்படி கூறிவிட்டனர்.

    இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.



    தகவலறிந்து அங்கு வந்த போலீசார், ஷெல்கி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது வீட்டில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், மின்சார கட்டணம் அதிகமாக வந்த காரணத்தால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினார். விசாரணையில், மின்சார அலுவலக ஊழியர், மின்சார பயன்பாட்டு அளவில் குறித்துள்ள எண்ணில் ஒரு புள்ளியை மாற்றி வைத்ததுதான் இந்த குழப்பத்துக்கு காரணம் என தெரிய வந்தது. 

    இரண்டாயிரம் ரூபாய்க்கு வந்த மின்சார கட்டணத்தை 8 லட்சம் ரூபாய் என குறித்த மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் ஷெல்கி இறந்தது அவரது உறவினர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. 

    இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், மின்சார அளவில் தவறாக பதிவிட்ட ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டார் என தெரிவித்தனர்.

    ஆனால், அவரது உறவினர்கள் தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் வகையில் அவரது உடலை தகனம் செய்ய மாட்டோம் என்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #ElectricityBill
    Next Story
    ×