search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம் மேலும் 3 ஆண்டுகள் நீடிப்பு
    X

    பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம் மேலும் 3 ஆண்டுகள் நீடிப்பு

    பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. இதன்மூலம் 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
    புதுடெல்லி:

    பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. இதன்மூலம் 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டு வருகிற தொகுதி அலவன்சு, பர்னிச்சர் அலவன்சு ஆகியவற்றை உயர்த்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டது.

    இதன்படி தொகுதி அலவன்சு மாதம் ரூ.45 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக உயர்கிறது. ஒரு முறை வழங்கப்படுகிற பர்னிச்சர் அலவன்சு ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் ஆகிறது.

    ஒவ்வொரு எம்.பி.க்கும் மத்திய அரசு மாதம் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் செலவிடுகிறது.

    தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் சேவை, சட்ட சேவைகள், தகவல் சேவை உள்ளிட 12 துறைகளை (சேம்பியன் சேவை துறைகள்) தேர்ந்தெடுத்து அவற்றின் மீது கவனம் செலுத்தி, அவற்றை மேம்படுத்துவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    இதற்கு உதவுவதற்காக ரூ.5 ஆயிரம் கோடியில் ஒரு நிதியம் உருவாக்கவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இதன்மூலம் வேலை வாய்ப்பு பெருகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். ஏற்றுமதியும் அதிகரிக்கும்.

    மத்திய குறு சிறு மற்றும் மத்தியதர நிறுவனங்கள் துறை அமைச்சகம், பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டத்தை 2008-09 ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டத்தை 2017-18, 2018-19, 2019-20 என 3 நிதி ஆண்டுகளுக்கு நீட்டிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த திட்டம் காதி மற்றும் கிராமப்புற தொழில் கமிஷனால் செயல்படுத்தப்படுகிறது. இது மானியத்துடனான கடன் திட்டம் ஆகும்.

    3 ஆண்டு காலம் இந்த திட்டத்தை நீட்டிப்பதற்கு ரூ.5 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்படுகிறது. இதன்மூலம் 3 ஆண்டுகளில் 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    குறைந்தபட்ச ஆதரவு விலையின்கீழ் பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்வதற்கு ‘நபெட்’ அமைப்புக்கு மத்திய அரசு ரூ.9 ஆயிரத்து 500 கோடி கேரண்டி (உத்தரவாதம்) அளித்து வந்தது.

    இந்த உத்தரவாதத்தை ரூ.19 ஆயிரம் கோடி என்ற அளவில் (இரு மடங்கு) உயர்த்துவதற்கும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு தனது ஒப்புதலை அளித்தது. 
    Next Story
    ×