search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி மலைப்பாதையில் வெடிப்பொருட்கள் - நாசவேலைக்கு சதியா?
    X

    திருப்பதி மலைப்பாதையில் வெடிப்பொருட்கள் - நாசவேலைக்கு சதியா?

    திருப்பதி மலைப்பாதையில் வெடிப்பொருட்களை கைபற்றிய போலீசார் செம்மரக்கடத்தல் கும்பல் வெடிப்பொருட்களை பதுக்கி வைத்தனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமலை:

    ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீவாரிமெட்டு பகுதியில் நேற்றிரவு ரோந்து சென்றனர்.

    அப்போது, அங்குள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் வெள்ளை நிற பிளாஸ்டிக் சாக்குப்பை ஒன்று கிடந்தது. சந்தேகமடைந்த போலீசார், அதை எடுத்து பிரித்து பார்த்தனர்.

    அதில், வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் மின்னணு உபகரணங்களின் உதிரிபாகங்கள், சர்க்யூட் செல்போன் பாகங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இருந்தது. சாக்குப்பையின் மேல் பகுதியில் திருச்சி என்று எழுதப்பட்டுள்ளது.

    இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக இது குறித்து செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு ஜ.ஜி. காந்தாராவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு விரைந்து சென்று வெடிப்பொருட்களை பார்வையிட்டார்.

    பின்னர் அவற்றை கைப்பற்றி, திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு, ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.

    சந்திரபாபு நாயுடு சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி கோவிலுக்கு வந்த போது அவரை கொலை செய்வதற்காக அலிப்பிரி பகுதியில் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 6 கண்ணி வெடிகளை தீவிரவாதிகள் வெடிக்க செய்தனர்.

    இந்த சம்பவத்தில் சந்திரபாபு நாயுடு பயணம் செய்த கார், பல அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டது. அவரும் பலத்த காயமடைந்தார்.

    திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக பல வெளிநாட்டு அதிபர்கள், பிரதமர்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய தலைவர்கள் பலர் திருமலைக்கு வந்து செல்கின்றனர்.

    இந்த வேலையில், அவர்கள் மீது அசம்பாவிதம் நிகழ்த்துவதற்காக, வெடிகுண்டு தயாரிக்க திட்டமிட்டு இந்த பொருட்களை தீவிரவாதிகள் கொண்டு வந்தனரா?

    அல்லது செம்மரக்கடத்தல் கும்பல் வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்தனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாக்குப்பையில் திருச்சி என்று முகவரி எழுதப்பட்டிருந்ததால் திருச்சியில் இருந்து இந்த பையை கொண்டு வந்திருக்கலாம் என்று கோணத்திலும், ஆந்திர போலீசார் விசாரணை முடுக்கி உள்ளனர். #tamilnews

    Next Story
    ×