search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவின் உண்மையான நண்பர் வெள்ளை மாளிகையில் இருக்கிறார்: டிரம்ப் மகள் பேச்சு
    X

    இந்தியாவின் உண்மையான நண்பர் வெள்ளை மாளிகையில் இருக்கிறார்: டிரம்ப் மகள் பேச்சு

    ஐதராபாத் நகரில் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவான்கா, பிரதமர் மோடி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டை நடத்துகிறது. இன்று தொடங்கும் மாநாடு மூன்று நாட்களுக்கு நடக்க உள்ளது.

    உலகம் முழுவதும் இருந்து 127 நாடுகளைச் சேர்ந்த 1200-க்கும் மேற்பட்ட இளம் தொழில் முனைவோர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் தவிர சுமார் 300 முதலீட்டாளர்களும் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். அமெரிக்காவில் இருந்து அதிகளவிலான பிரதிநிதிகள் வந்துள்ளனர்.

    அமெரிக்காவின் 38 மாகாணங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் என 350 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவான்கா தலைமையேற்று அழைத்து வந்துள்ளார்.

    இந்நிலையில், மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய இவான்கா டிரம்ப், 70-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்திய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி தனது உரையை தொடங்கினார். இந்தியாவின் உண்மையான நண்பர் வெள்ளை மாளிகையில் இருக்கிறார் என தனது தந்தையை குறிப்பிட்டு பேசிய அவர் பிரதமர் மோடியை வெகுவாக புகழ்ந்தார்.

    மேலும் அவர் பிரதமர் மோடி குறித்து பேசுகையில், “நீங்கள் இங்கே சாதித்துள்ளது அசாத்தியமானது மற்றும் பிரமிக்கத்தக்கது. சிறுவயதில் டீ விற்பவராக தொடங்கி தற்போது பிரதமராக வந்துள்ளீர்கள். அசாத்திய மாற்றம் சாத்தியமே என்பதற்கு நீங்கள் (மோடி) உதாரணமாக இருக்கிறீர்கள்” என்று கூறினார்.

    மேலும், அவர் பேசுகையில், “தொழில்நுட்ப வசதிகளை கொண்ட இந்த பண்டைய நகரத்தில் இருப்பது சிறப்பானதாக இருக்கிறது. இங்குள்ள உங்களது தொழில்நுட்ப மையங்கள் உலகப்புகழ் பெற்ற பிரியானியை கூட வெல்லும். முதன் முதலாக சுமார் 1500 பெண் தொழில் முனைவோர்கள் இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன்” என்று இவான்கா தெரிவித்தார்.

    மாநாடு தொடங்கப்படுவதற்கு முன்னதாக பிரதமர் மோடியுடன், இவான்கா டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    Next Story
    ×