என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிராம மக்களால் ஹீரோவாக கொண்டாடப்பட்டு மதிப்பிழந்த ஐ.பி.எஸ். அதிகாரி
    X

    கிராம மக்களால் ஹீரோவாக கொண்டாடப்பட்டு மதிப்பிழந்த ஐ.பி.எஸ். அதிகாரி

    கிராம மக்களால் ஹீரோவாக கொண்டாடப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சபீர் கரீம், காப்பி அடித்து கைது செய்யப்பட்டதால் அவருக்கு இருந்த ஹீரோவுக்கான அந்தஸ்து சரிந்து விட்டது.
    திருவனந்தபுரம்:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய சபீர்கரீம் என்பவர் சென்னையில் உள்ள மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினார். அப்போது அவர் புளூடூத் கருவியை பயன்படுத்தி தேர்வில் காப்பி அடித்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் நடத்தும் அவரது மனைவி ஜாய்சி மற்றும் அந்த மைய நிர்வாகி ராம்பாபு ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஜாய்சி அவரது ஒரு வயது பெண் குழந்தையுடன் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ராம்பாபுவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    இந்தியில் வெளியான முன்னாபாய் எம்.பி.பி.எஸ். என்ற திரைப்படத்தில் கதாநாயகனான சஞ்சய்தத் புளூடூத் கருவி மூலம் வெளியில் உள்ளவரிடம் விடை கேட்டு தேர்வு எழுதுவார். இந்த படம் தமிழில் கமலஹாசன் நடிப்பில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதை போல இவர்களும் தேர்வில் காப்பி அடிக்க முயன்று போலீசில் சிக்கி உள்ளனர். ஒரு முறை சபீர்கரீம் தான் போலீஸ் வேலையை தேர்ந்தெடுத்தற்கான காரணம் பற்றி கூறும் போது சுரேஷ் கோபி போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்த கமி‌ஷனர் என்ற மலையாள படமே தன்னை போலீஸ் வேலையை தேர்ந்தெடுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியதாக கூறி இருந்தார். தற்போது தவறான வழிகாட்டிய சினிமாவை பின்பற்றியதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சபீர் கரீமின் சொந்த ஊர் கேரள மாநிலம் கொச்சி நெடும்பாச்சேரி அருகே உள்ள வயல்கரா கிராமமாகும். கிராமத்தைச் சேர்ந்த சபீர் கரீம் ஐ.பி.எஸ். தேர்வு எழுதி அதில் வெற்றியும் பெற்று போலீஸ் உதவி சூப்பிரண்டாக பதவி ஏற்றது அந்த கிராம மக்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் போலீஸ் அதிகாரியானதால் அவர்கள் சபீர் கரீமை தங்கள் ஹீரோவாக கொண்டாடினார்கள். அவர் படித்த ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்துக்கும் நல்ல மதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த பயிற்சி மையத்தின் கிளைகள் கேரளா மட்டுமின்றி ஐதராபாத், போபால் போன்ற இடங்களிலும் திறக்கப்பட்டது.

    மேலும் கேரள பயிற்சி மையத்தில் சபீர் கரீம் பயிற்சி பெற்ற போது தான் அங்கு பயிற்சியாளராக இருந்த ஜாய்சியுடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.


    இந்த நிலையில் தான் தேர்வில் காப்பி அடித்து கணவன்-மனைவி இருவரும் தற்போது ஜெயிலில் அடைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    தாங்கள் ஹீரோவாக கொண்டாடிய சபீர் கரீம் கைது செய்யப்பட்டது அந்த கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவர் செய்த செயலால் தங்கள் கிராமத்திற்கே இழுக்கு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கோபமும் அடைந்துள்ளனர். இதனால் அந்த மக்கள் மத்தியில் சபீர் கரீமுக்கு இருந்த ஹீரோவுக்கான அந்தஸ்தும் சரிந்து விட்டது.
    Next Story
    ×