search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் மேல்சபை இடைத்தேர்தலில் அல்போன்ஸ் கண்ணந்தானம் போட்டியிடுவார்: பா.ஜ.க. அறிவிப்பு
    X

    ராஜஸ்தான் மேல்சபை இடைத்தேர்தலில் அல்போன்ஸ் கண்ணந்தானம் போட்டியிடுவார்: பா.ஜ.க. அறிவிப்பு

    ராஜஸ்தான் மாநில மேல்சபை இடைத்தேர்தலில் அல்போன்ஸ் கண்ணந்தானத்தை வேட்பாளராக நிறுத்த பாரதிய ஜனதா மேலிடம் முடிவெடுத்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி அமைந்த போது, பிரதமர் மோடியின் மந்திரி சபையில் கேரள மாநிலத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய மந்திரி சபை மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்போன்ஸ் கண்ணந்தானத்தை பிரதமர் மோடி மத்திய சுற்றுலா துறை மந்திரியாக நியமித்தார்.

    பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் உறுப்பினராக இல்லாத அல்போன்ஸ் கண்ணந்தானம் உடனடியாக மந்திரி பதவி ஏற்றுக்கொண்டார்.

    இதையடுத்து அல்போன்ஸ் கண்ணந்தானம் ஏதாவது ஒரு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட வெங்கையா நாயுடு சமீபத்தில் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். இதனால் அவர் ராஜஸ்தான் மாநில மேல்சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் அந்த பதவி காலியாக இருந்தது. இதற்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் மத்திய மந்திரி அல்போன்ஸ் கண்ணந்தானத்தை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக நிறுத்த கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பை கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று அறிவித்தார்.

    ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 எம்.எல்.ஏ.க்களில் 160 பேர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள். இங்கு காங்கிரஸ் கட்சிக்கு 24 எம்.எல்.ஏ.க்களே உள்ளனர். எனவே இங்கு நடக்கும் மேல்சபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் உறுதியாக வெற்றி பெறுவார்.

    இதற்கான தேர்தல் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய வருகிற 6-ந்தேதி இறுதி நாளாக இருக்கும். இதில் போட்டி இருந்தால் தேர்தல் நடைபெறும். இல்லையேல் அல்போன்ஸ் கண்ணந்தானம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்.
    Next Story
    ×