search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய ராணுவத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் வாங்க முடிவு
    X

    இந்திய ராணுவத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் வாங்க முடிவு

    இந்திய ராணுவத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு நவீன ஆயுதங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய ராணுவத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கு நவீன ஆயுதங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்திய ராணுவத்துக்கு தேவையான கணிசமான ஆயுதங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. சமீபத்தில் மாநாடு ஒன்றில் பேசிய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், ராணுவத்தை நவீனப்படுத்தப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், ராணுவத்தின் போர்திறனை மேம்படுத்துவதற்கு இடையூறாக உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.

    இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், இந்திய ராணுவம் நவீனப்படுத்தப்படும் என்றும், எல்லை பகுதிகளை கண்காணிக்க நவீன சாதனங்கள் வாங்கப்படும் என்றும் கூறினார்.

    அவர் கூறியபடி, ராணுவத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஆயுதங்களுக்கு பதிலாக நவீன ஆயுதங்களை வாங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. 7 லட்சம் துப்பாக்கிகள், 44 ஆயிரம் எடை குறைந்த இயந்திர துப்பாக்கிகள் மற்றும் 44 ஆயிரத்து 600 சிறிய ரக துப்பாக்கிகள் கொள்முதல் செய்ய தீர்மானிக்கப்பட்டு இருப்பதாக கூறிய அந்த வட்டாரங்கள், முதலில் 10 ஆயிரம் எடை குறைந்த துப்பாக்கிகள் வாங்கப்படும் என்றும் தெரிவித்தன.

    இந்த ஆயுதங்கள் ரூ.40 ஆயிரம் கோடி செலவில் வாங்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின. 
    Next Story
    ×