search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீருக்கு தன்னாட்சி: ப.சிதம்பரம் கருத்துக்கு பா.ஜனதா கண்டனம்
    X

    காஷ்மீருக்கு தன்னாட்சி: ப.சிதம்பரம் கருத்துக்கு பா.ஜனதா கண்டனம்

    காஷ்மீர் மாநிலத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்ற ப.சிதம்பரத்தின் கருத்துக்கு பாரதிய ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் வலியுறுத்தினார்.

    குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாக கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும். அதே வேளையில் அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின்படி காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

    இது தொடர்பாக காஷ்மீர் மக்களுடன் கலந்துரையாடினேன். அவர்களின் பெரும்பாலோர் காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று கூறினர். அதுவே எனது விருப்பமாகவும் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ப.சிதம்பரத்தின் இந்த கருத்துக்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய மந்திரி அருண்ஜெட்லி இது குறித்து கூறியதாவது:-


    காஷ்மீர் பிரச்சினைக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம். அந்த கட்சிதான் 1947-ம் ஆண்டில் இருந்தே தவறான கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறது. கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்காமல் நாட்டில் மேலும் நெருக்கடியை உருவாக்குவதற்கு அந்த கட்சி விரும்புகிறது. ஒட்டுமொத்த நாட்டையே ஏமாற்றி வருகிறது. தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு காஷ்மீரில் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்

    மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-


    ப.சிதம்பரம் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால் வியப்பை ஏற்படுத்தவில்லை.

    ஏனென்றால் அவரது கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியோ, மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார், தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராடியவர்களுக்கு ஆதரவு கொடுத்தவர்.

    நாட்டின் நன்மைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் சர்தார் வல்ல பாய்பட்டேல். அவர் பிறந்த மண்ணில் இருந்து ப.சிதம்பரம் பேசுவது அவமானகரமான செயல்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரம் குறித்த பேச்சு ப.சிதம்பரத்தின் தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளது

    Next Story
    ×