search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை: தள்ளுமுள்ளில் சிக்கி பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்
    X

    மும்பை: தள்ளுமுள்ளில் சிக்கி பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்

    மும்பை ரெயில்வே நடைபாதை மேம்பாலத்தில் இன்று காலை ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு ரெயில்வே துறை மற்றும் மகாராஷ்டிர அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    மும்பை:

    மும்பை நகரின் பல பகுதிகளில் இன்று காலை லேசான மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வழக்கம்போல் தங்களது அன்றாட வாழ்க்கையை தொடர்ந்தனர்.

    காலை சுமார் 10.30 மணியளவில் பரேல் - எல்பின்ஸ்டன் சாலையை இணைக்கும் ரெயில்வே மேம்பாலத்தின் வழியாக ரெயில் பயணிகள் கடந்து சென்றபோது திடீரென்று பயங்கர வெடிச் சப்தம் கேட்டது. பாலத்தின் அடியில் யாரோ வெடிகுண்டு வைத்திருப்பதாக சிலர் கூச்சலிட்டனர்.

    இந்த வதந்தியால் மக்கள் தலைதெறிக்க ஓடினர். கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி 15 பேர் பலியானதாகவும், காயம் அடைந்த பலர் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது.

    பிற்பகல் நிலவரப்படி பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 60 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த கோரச் சம்பவத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானதை அறிந்து வேதனை அடைந்துள்ளேன், அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

    மும்பை சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் தெரிவிப்பதுடன், காயமடைந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறேன். அங்குள்ள நிலவரத்தை ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல் நேரில் கண்காணித்து வருகிறார் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    மும்பையில் முகாமிட்டுள்ள ரெயில்வே மந்திரி பியுஷ் கோயல், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், தள்ளுமுள்ளில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சை செலவுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்த பியுஷ் கோயல் விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விபத்து தொடர்பான தகவல் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாக மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தேவையான தொழில்துறை முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் நாட்டுக்கு சென்றுள்ள தேவேந்திர பட்னவிஸ், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கான அனைத்துவித சிகிச்சை செலவுகளையும் மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    ரெயில்வே துறையினருடன் சேர்ந்து மாநில அரசும் தீவிரமாக விசாரணை நடத்தி, இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேவேந்திர பட்னவிஸ் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×