என் மலர்
இந்தியா

இந்தியாவில் 13% குழந்தைகள் குறைப்பிரசவம்.. 17% குழந்தைகள் குறைந்த எடையில் பிறக்கின்றன - காரணம் என்ன?
- PM 2.5 கொண்ட காற்றை சுவாசிப்பது, முன்கூட்டிய பிறப்பு மற்றும் குறைந்த எடை பிறப்புக்கு வழிவகுக்கும்
- மழை, வெப்பம் மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்ட வானிலை நிலைமைகள் இதற்கு காரணம் .
2019-21 மக்கள்தொகை சுகாதார கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இந்தியாவில் 13 சதவீத குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறக்கின்றன. 17 சதவீத குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்கின்றன. மழை, வெப்பம் மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்ட வானிலை நிலைமைகள் இதற்கு காரணம் என்று ஆய்வு கூறுகிறது.
டெல்லி ஐஐடி, மும்பை சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், கர்ப்ப காலத்தில் காற்று மாசுபாட்டை மதிப்பிடுவதற்கு மத்திய அரசின் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பிலிருந்து ரிமோட் சென்சிங் தரவைப் பயன்படுத்தி ஆய்வு செய்தனர்.
சுவாச மண்டலத்தை கடுமையாக சேதப்படுத்தும் நுண்ணிய துகள் பொருளான PM 2.5 கொண்ட காற்றை சுவாசிப்பது, குறைப்பிரசவம் மற்றும் குறைந்த எடை பிறப்புக்கு வழிவகுக்கும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம், டெல்லி, உத்தரகண்ட் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் PM 2.5 நுண்ணிய துகள்கள் காற்றில் அதிக அளவில் காணப்படுகிறது.
தென் மாநிலங்களில் இந்த சதவீதம் பொதுவாக குறைவாகவே உள்ளது.
பஞ்சாபில் அதிக எடை குறைந்த குழந்தைகள், 22 சதவீதம் உள்ளனர். டெல்லி, மத்தியப் பிரதேசம், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.