என் மலர்

  கதம்பம்

  நவராத்திரி தத்துவம்
  X

  நவராத்திரி தத்துவம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆண்களுக்கு வெள்ளை வேட்டி சட்டை என்று ஒரு மரபு இருந்தது.
  • ஆண்கள் அந்தகாலத்தில் வெள்ளைநிற ஆடைகளைத் தவிர வேறு நிற ஆடைகள் உடுத்துகிற பழக்கமில்லை.

  எல்லார் வீடுகளிலும் நவராத்திரி பெருவிழா, நல்ல மகிழ்ச்சியோடும் கலகலப்பாகவும், குறைந்தபட்சம் சுண்டலோடும் கொண்டாடப்படும்.

  "வீடுதோறும் கலையின் விளக்கம்

  வீதிதோறும் இரண்டொரு பள்ளி"

  என்பது பாரதியின் கனவு.

  வீடு தோறும் கலையின் விளக்கம் என்றால், ஒரு சங்கீத கச்சேரிக்கு போய்தான் சங்கீத கச்சேரி கேக்கணும்.. ஒரு டான்ஸ் கச்சேரிக்கு போய் தான் டான்ஸ் பார்க்கணும்.. அப்படி என்கிறதையெல்லாம் தாண்டி ஒவ்வொருத்தருடைய வீட்டிலும் ஆடல் பாடல் இதெல்லாம் நிகழுனும் என்பதைத்தான் கலையின் விளக்கம் என்று பாரதி கண்டார்.

  டான்ஸ் என்கிறது யாரோ மேடையில் ஆடி, போக்கஸ் லைட்டு வச்சு பார்க்கிறது என்பதாக இருக்கக்கூடாது.

  நம்ம ஆடணும்.. அவங்க அவங்க வீட்டுல எல்லாரும் மகிழ்சியா ஆடணும், பாடணும்.. அது தான் நவராத்திரி.

  எல்லாரும் ஆடிப்பாடி மங்களகரமாக இருக்கிற கலர்புல் விழா தான் நவராத்திரி.

  பெண்கள் எங்கு சம்பந்தப்பட்டாலுமே அங்கே வண்ணம் வந்திரும்.. கலர் வந்துடும்..

  ஆண்களுக்கு வெள்ளை வேட்டி சட்டை என்று ஒரு மரபு இருந்தது. ஆண்கள் அந்தகாலத்தில் வெள்ளைநிற ஆடைகளைத் தவிர வேறு நிற ஆடைகள் உடுத்துகிற பழக்கமில்லை.

  அந்த காலத்துல பெண்களுக்கு வெள்ளைநிற உடை கொடுக்க மாட்டார்கள். அதை வேறு மாதிரி நினைப்பாங்க.

  ஏன் வெள்ளை என்பதை ஒற்றை நிறமாகவும் மற்றதையெல்லாம் வண்ணமாக கருதுறாங்க?

  பெண்களுக்கு வண்ணங்கள், ஆண்களுக்கு வெள்ளையுமாக வச்சிருக்காங்களே ஏன்?

  வெண்மை என்பது ஒற்றை நிறமில்எலை. அது எல்லா நிறங்களும் ஒடுங்கிய நிலை. அதை பிரித்தால் ஏழு வண்ணங்களாக விரிவடையும்.

  சிவன் என்பது ஒடுக்கம்.

  அம்பிகை என்பது விரிவு.

  ஒடுக்கம் என்பது சிவனாகவும், விரிவு என்பது அம்பிகையாவும் கொண்டாடப்படுகிறது.

  இந்த பிரபஞ்சத்தில் என்ன நடக்கிறது?

  எல்லாம் ஒன்றில் ஒடுங்குது, பின்பு விரியுது. திரும்பி எல்லாம் ஒன்னுல ஒடுங்குது, மீண்டும் அதிலிருந்து விரியுது. இப்படித்தான் பிரபஞ்சத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

  "ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து

  இவ்வுலகு எங்குமாய் நின்றாள்"

  என அம்பிகையைப் பாடுகிறார் அமிராமி பட்டர்.

  அப்ப கடவுள் என்பது கூட ஒடுங்கி ஒற்றை நிலையில் நின்றால் அது சிவம். அது பலவாய் விருத்தி அடைந்தால் அம்பிகை.

  எப்படி ஒரு வேடிக்கையான கணக்கை வைத்துள்ளார்கள் பாருங்கள்..

  ஒன்பது நாள் நவராத்திரி

  ஒரேஒரு நாள் சிவராத்திரி

  இதுல என்ன கணக்கு இருக்கு? கொஞ்சம் அறிவியல் பூர்வமாக யோசிப்போம்..

  ஒன்று என்பது எண்ணிக்கையின் தொடக்கம்.

  ஒன்பது என்பது எண்ணிக்கையின் முடிவு. சரியாகச் சொன்னால் முடிவில்லாதது எனலாம்.

  ஒன்று ஒன்பது ஆதல் என்பது சிவராத்திரி நவராத்திரியாக ஆதல்.

  ஒரு அவரை விதையை எடுத்துக் கொள்ளுங்கள்.. அதற்குள் எத்தனை விதைகள் இருக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியுமா?

  நீங்கள் ஒரு அவரை விதையை ஆடி மாதத்தில் நட்டு வைத்தால், அது முளைத்து துளிர்விட்டு கொடியாகி பூத்து ஆயிரக்கணக்கான காய்களை காய்க்கும். அந்த காய்களில் லட்சக்கணக்கான விதைகள் இருக்கும்.

  ஒரு விதையை பூமியில் போட்டால் ஒரு லட்சம் விதை வரும்.. ஒரு கோடி விதை கூட வரும். இப்படி பெருகிகொண்டு போய்கிட்டே இருக்கும்.

  வித்து என்பது சிவம். அது முளைத்து எண்ணிலடங்கா காய்களைத் தருவது என்பது அம்பிகை.

  ஒன்றாக இருத்தல் சிவராத்திரி,

  ஒன்பதாக ஆகுதல் நவராத்திரி.

  ஒன்றாக இருக்கிற விதையை ஒன்பதாக ஆக்குவது, சிவனை சீவனாக ஆக்குவது தான் நவராத்திரி.

  சிவன் மூலப்பொருள். அதை சீவனாக ஆக்குகிறாள் அம்பிகை. அது ஒரு மாயை.

  ஒரு விதையை பூமியில் போட்டால் அது ஒன்பது லட்சம் விதையாக மாறும். இதைவிட பெரிய மாயை என்ன வேணும்?

  இந்த மாயைக்கு பெயர் மகா மாயா. இதைத்தான் மகமாயி என்று அழைக்கிறார்கள். அவள்தான் அம்பிகை.

  அவள் மாயையினால் ஒன்றை பலமாக ஆக்குகிறாள்.

  ஒரு சிவனை பல கோடி சீவன்களாக மாற்றுகிறாள் மகா மாயா.

  இதற்காக கொண்டாடப்படும் விழாதான் நவராத்திரி.

  அபிவிருத்தியாதல்.. ஒன்றாக இருந்தது பலவாக மாறி இந்த உலகத்தை வண்ணமயப்படுத்துதல்.. அழகுப்படுத்துதல்.. இது தான் நவராத்திரியின் தத்துவம்.

  அது துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என.. கல்வி, செல்வம், வீரம் என.. இவற்றோடு வெற்றி விழாவான விஜயதசமியும் சேர்த்து கொண்டாடுகிற பெரிய திருவிழாவாக மாறி உள்ளது.

  புராணக்கதைகள் நிறைய சொல்லுவோம். குழந்தை மனம் கொண்டவர்களுக்கு தான் இந்த புராணக்கதைகள் எல்லாம்.

  எருமை வடிவத்தில் ஒரு அரக்கன் வந்தான் என்பார்கள். எருமை வடிவத்தில் ஒருவன் இருக்க முடியுமா..? எருமை மாதிரி இருக்க முடியும்.

  மகிஷாசுரன் அப்படின்னு அவனுக்கு பேரு. ஏன் அப்படி சொன்னார்கள்?

  எருமை மாடு சோம்பல் மிகுந்தது. நமக்குள் இருக்கிற சோம்பலைத்தான் எருமைத்தனத்துடன் ஒப்பிட்டு அப்படி கூறினார்கள்.

  சோம்பலுக்கு தமோ குணம் என்று பெயர். அதை சகித்துக்கொண்டு வாழ முடியுமா?

  முடியாது.

  சோம்பலை வீழ்த்தினால் தான் நாம் வாழ்வில் முன்னேற முடியும்.

  அப்போ அதனை வீழ்த்தணும். அதை எது வீழ்த்தும் என்றால் மனோ பலம் தான் வீழ்த்தும்.

  துர்க்கை என்பது மன உறுதி.

  துர்க்கம் என்றால் அரண் என்று பொருள்.

  துர்க்கா என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?

  கோட்டை மதில் சுவருக்கு துர்க்கம் என்று பெயர். அதில் ஒரு தேவதையை வைப்பார்கள். பாதுகாப்புக்கு காவல் தேவதையாக வைப்பார்கள். அதுக்குதான் துர்க்கா என்று பெயர். துர்க்கத்தில் வைக்கப்படுகிற தேவதை துர்க்கா.

  இந்த தேவதை மன உறுதி உடையவள்.

  மன உறுதிக்கு அடையாளம் துர்க்கை.

  அது எதை வெல்லும்?

  நமக்குள் இருக்கிற சோம்பல் என்கிற மகிஷாசுர அரக்கனைக் கொல்லும்.

  மன உறுதி சோம்பலை வெல்லும் என்கிற உருவகத்தைதான் இந்த புராணக்கதை காட்டுகிறது.

  சுகி சிவம் சொற்பொழிவிலிருந்து தொகுத்தவர் கோ.வசந்தராஜ்

  Next Story
  ×