என் மலர்
கதம்பம்

கனவு நாயகி மர்லின் மன்றோ
- மர்லின் மன்றோ ஒரு கம்யூனிஸ்ட் அபிமானி என்ற முடிவுக்கு அமெரிக்க நிர்வாகம் வந்தது.
- மர்லின் மன்றோ நிஜ வாழ்க்கையில் மிக மோசமான மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அமெரிக்காவில், ஜூன் 1, 1926-இல் லாஸ்ஏஞ்சல்ஸில் பிறந்த "நார்மா ஜீன்" என்ற குழந்தை பெற்றோரால் கைவிடப்பட்டது.
தெருவில் நின்று தவித்த அந்த குழந்தையை ஒரு சமூக செயல்பாட்டாளர் அனாதை இல்லத்தில் சேர்ந்தார்.
பதினெட்டு வயது நார்மா ஒரு ரேடியோ தொழிற்சாலையில் வேலை செய்யும்போது, ஒளிப்படக் கலைஞர் ஒருவர் எடுத்த விளம்பர ஒளிப்படத்தில் நார்மாவைப் பார்த்த ஒரு சினிமா தயாரிப்பாளர் இவரை ஹாலிவுட் திரை உலகிற்கு 1947ஆம் ஆண்டு "மர்லின் மன்றோ"வாக அறிமுகப்படுத்தினார்…
இந்த ஐந்தரை அடி உயரமான ஒல்லியான 19 வயதுப் பெண் ஹாலிவுட்டில் நுழைந்தபோது, கோடிக்கணக்கான ரசிகர்களைத் தன் அழகால் கட்டிப்போடுவாள் என்று எவரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.
அன்றிலிருந்து 15 ஆண்டுகள் வெற்றிகரமான கனவுக் கதாநாயகியாக வலம் வந்த மர்லின் யாரும் எதிர்பாராத விதமாக ஆகஸ்ட் 5, 1962 அன்று மர்மமாக இறந்து கிடந்தார். அப்போது அவரது வயது 36.
பலரும் நினைப்பதுபோல் மர்லின் மன்றோ வெறும் கவர்ச்சிக் கன்னியோ, பொது அறிவு இல்லாத அழகுப் பதுமையோ இல்லை.
அவர் ஒரு சுதந்திரமான, இடதுசாரி சிந்தனை கொண்ட அறிவுஜீவி.
அவரது மரணத்துக்குப் பிறகு அவரது வீட்டை சோதனையிட்ட போலீஸ், அவரி பல அரிய புத்தகங்கள் அடங்கிய நூலகம் இருந்ததாக குறிப்பிட்டனர்..
அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட அமைப்பு.
சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவிய பனிப்போர் காலத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்கள் கல்வி, பத்திரிகை, பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஊடுவுவதைத் தடுப்பதிலும் கண்காணிப்பதிலும் FBI தீவிரம் காட்டியது.
இடதுசாரி சிந்தனையாளர்களை சோவியத் உளவாளிகள் என்றும், தேசத் துரோகிகள் எனவும் முத்திரை குத்தி அவர்கள் ஒருதலைப்பட்சமாக தண்டிக்கப்பட்டனர். இதற்கு "மெக்-கார்த்தியிசம்" என்று பெயர்.
மர்லின் அமெரிக்க கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு ஆதரவு நிலையில் இருந்தார் என்பது FBI இன் குற்றச்சாட்டு.
அன்றைய ஜனாதிபதி ஜான் கென்னடி முதல் ஹென்றி கிசிங்கர் வரை அனைத்து பிரபல அரசியல் தலைவர்களுடனும் நட்புடன் இருந்த மர்லின் மன்றோ, ஆளும் வர்க்கத்துக்கு எதிரான இடதுசாரி சிந்தனையாளரும் திரைக்கதை வசன எழுத்தாளருமான "ஆர்தர் மில்லர்" என்பவருடனும் நெருக்கமாக இருந்தார்.
பிரபல புகைப்பட கலைஞரும் தீவிர இடதுசாரி சிந்தனையாளரும் சேகுவேராவின் நண்பருமான "பாப் ஹென்றிக்"குடனும் மர்லின் நட்பு பாராட்டினார். இதனால் மர்லின் மன்றோ ஒரு கம்யூனிஸ்ட் அபிமானி என்ற முடிவுக்கு அமெரிக்க நிர்வாகம் வந்தது.
ஜனாதிபதி ஜான் கென்னடியின் தம்பியான ராபர்ட் கென்னடி, மர்லின் மன்றோவை தீவிரமாக காதலித்தார் என்றும் இவருக்காக தன் மனைவியை விவாகரத்து செய்யும் முயற்சியில் ஈடுபட்டார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
மர்லின் உலகப் புகழ்பெற்ற அழகியாகவும் ஹாலிவுட் கொண்டாடும் நட்சத்திரமாகவும் இருந்ததால் அவர் மீது வெளிப்படையாக நடவடிக்கை எடுக்க FBI தயங்கியது என்று கூறப்படுகிறது.
திரையில் மகிழ்ச்சியாகத் தோன்றிய மர்லின் மன்றோ நிஜ வாழ்க்கையில் மிக மோசமான மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். டாக்டர் அறிவுரைப்படி BARBITURATE என்ற போதை மாத்திரையை சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில்தான் மர்லின் மன்றோவின் அகால மரணம் நிகழ்ந்து.
பார்பிடூரேட் என்ற போதை மாத்திரையை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் அவர் இறந்தார் என்று பிரேதப் பரிசோதனயின் முடிவு தெரிவிக்கிறது.
ஆனால் அது கொலையா அல்லது தற்கொலையா என்று தெளிவாக கூறப்படவில்லை.
-சுந்தரம்






