என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதாவின் 184 வேட்பாளர்களில் 35 பேர் கிரிமினல் குற்றவாளிகள்
    X

    பா.ஜனதாவின் 184 வேட்பாளர்களில் 35 பேர் கிரிமினல் குற்றவாளிகள்

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள 184 பேரில் 35 பேர் கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளவர்களாக இருக்கிறார்கள். #LSPolls #BJP
    புதுடெல்லி:

    கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளான பலர் இந்திய அரசியலில் அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ. என முக்கிய பதவிகளில் இருந்து வருகிறார்கள்.

    இவ்வாறு குற்றவாளிகள் அரசியலில் பதவிகளை பிடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவர்கள் அரசியலுக்கு வருவதை முழுமையாக தடுக்க முடியவில்லை.

    நாட்டில் உள்ள பல கட்சிகளும் கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் டிக்கெட் கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

    இப்போது நடக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் பல கட்சிகள் கிரிமினல் குற்றவாளிகளை வேட்பாளராக அறிவித்து உள்ளன.

    பாரதிய ஜனதா கட்சியிலும் கூட இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் பலர் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களாக இருக்கின்றனர்.

    தற்போது பாரதிய ஜனதா தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் 184 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்களில் 35 பேர் கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளவர்களாக இருக்கிறார்கள். 184 பேரில் 78 பேர் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டவர்கள் ஆவர்.

    ஏற்கனவே அவர்கள் தாக்கல் செய்த வேட்புமனு அடிப்படையில் இந்த 78 பேரில் யார்-யார்? கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ற விவரம் கிடைத்துள்ளது. அதன் படிதான் 35 பேர் கிரிமினல் குற்ற வழக்கு உள்ளவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    மற்ற 106 பேரில் யார்-யார் கிரிமினல் குற்றவாளிகள் என்பது அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு தான் தெரிய வரும்.

    35 பேரில் மராட்டிய மாநிலம் சந்திரபூர் தொகுதியில் போட்டியிடும் ஹன்ஸ் ராஜ் கங்காராம் மீதுதான் அதிக வழக்கு உள்ளது. அவர் மீது 11 கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஹன்ஸ் ராஜ் கங்காராம் தற்போது மத்திய உள்துறை இணை மந்திரியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஒடிசா மாநிலம் பால சோர் தொகுதி வேட்பாளர் பிரதாப் சாரங்கி மீது 10 கிரிமினல் வழக்குகள் உள்ளன.

    பாரதிய ஜனதா முன்னாள் தலைவரும் மத்திய மந்திரியுமான நிதின்கட்காரி மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். அவர் மீது 5 கிரிமினல் வழக்குகள் உள்ளன.

    வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மற்றொரு முக்கிய தலைவர் சாக்‌ஷி மகராஜ் மீதும் கிரிமினல் வழக்கு உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவில் வெற்றி பெற்ற 282 பேரில் 98 பேர் மீதும், காங்கிரசில் வெற்றி பெற்ற 44 பேரில் 8 பேர் மீதும் கிரிமினல் வழக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. #LSPolls #BJP #BJPCandidates
    Next Story
    ×