search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ், பா.ஜனதா வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
    X

    தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ், பா.ஜனதா வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு

    தமிழக காங்கிரஸ், பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #LSPolls #Congress #BJP
    சென்னை:

    தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் கிடைத்துள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். இதுபோல் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியலும் இன்னும் வெளியிடப்படவில்லை.

    தமிழக காங்கிரஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லி சென்று கட்சி மேலிடத்தில் ஒப்படைத்தார். இதுபோல் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழ்நாட்டில் போட்டியிட வாய்ப்புள்ளவர்கள் பட்டியலை கட்சி மேலிடத்தில் கொடுத்து இருக்கிறார்.

    காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை மத்திய காங்கிரஸ் செயற்குழு நேற்று பரிசீலனை செய்தது. இதில் தமிழ்நாடு உள்பட வேறு சில மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் இறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதி பட்டியல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒப்புதலுக்காக அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் பா.ஜனதா சார்பில் தமிழகத்தில் போட்டியிடுவோரின் இறுதி பட்டியலும் தயாராகிவிட்டது. இது கட்சி மேலிட பரிசீலனையில் உள்ளது.

    தமிழக காங்கிரஸ், பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகிறது. மாலைக்குள் இந்த பெயர் விபரங்கள் அறிவிக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தமிழகம்-புதுச்சேரியில் காங்கிரஸ் திருவள்ளூர், ஆரணி, தேனி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, கரூர், திருச்சி, விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் நிற்கிறது. இதற்கு சீட் வாங்க கடும் போட்டி நிலவுகிறது. பா.ஜனதா கன்னியாகுமரி, கோவை, சிவகங்கை, ராம நாதபுரம், தூத்துக்குடி ஆகிய 5 தொகுதிகளில் களம் இறங்குகிறது. இதற்கும் பல வேட்பாளர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. எனவே இரண்டு கட்சிகளிலும் வேட்பாளர்கள் யார் என்பதை அறிய கட்சி தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.



    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில், ‘‘இன்று மதியம் பா.ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘‘காங்கிரஸ் பட்டியலில் பெண் பெயரும் இடம் பெறும்’’ என்று கூறியுள்ளார். எனவே குஷ்பு போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. #LSPolls #Congress #BJP

    Next Story
    ×