என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருசக்கர வாகனம் மோதி வாலிபர் சாவு
    X

    இருசக்கர வாகனம் மோதி வாலிபர் சாவு

    • எதிர்பாராத விதமாக திம்மாபுரம் சர்வீஸ் சாலையில் நின்றிருந்த லாரி மீது கணேசன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது.
    • தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே கணேசன் பலியானார்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டிணம் ஒட்டி உள்ள தேசிய நெடுஞ் சாலையில் திம்மாபுரம் அருகே ஏராளமான மீன் கடைகள் உள்ளன. இந்த நெடுஞ் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் சென்று வருகின்றன. இந்நிலையில் சாலையில் கடந்து போகும் லாரிகள் இங்கு உள்ள மீன் கடைகள் மற்றும் ஓட்டல் கடைகள் முன்பு தங்கள் லாரிகளை நிறுத்திவிட்டு கிருஷ்ணகிரி அணையில் இருந்து வரும் கால்வாயில் குளித்துவிட்டு அங்கிருக்கும் ஒட்டல் கடைகள், மீன் கடைகளில் சாப்பிட்டு செல்வது வழக்கம்.

    இதனால் நெடுஞ் சாலையை ஆக்கிரமித்து லாரிகளை நிறுத்திவிட்டு அங்குள்ள மீன் கடைகள் மற்றும் ஹோட்டல்களில் சாப்பிடுகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 7.15 மணி அளவில் கிருஷ்ணகிரியில் இருந்து காவேரிப்பட்டணம் வரும் சர்வீஸ் சாலையில் ஒரு லாரி நின்றிருந்தது. அப்போது காவேரிப்பட்டினம் அடுத்த பென்னேஸ்வரமடம் அருகே உள்ள கொட்டாவுரை சேர்ந்த கணேசன் (32) என்பவர் இச்சாலையில் வரும்போது எதிர்பாராத விதமாக திம்மாபுரம் சர்வீஸ் சாலையில் நின்றிருந்த லாரி மீது இவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது.

    இதனால் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே கணேசன் பலியானார். இது குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். இது குறித்து காவேரிப்பட்டணம் காவல் துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அப்பகுதி மக்கள் கூறுகையில் இங்கு ஏராளமான மீன் கடைகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை என்பதால் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் சாலைகளை ஆக்கிரமித்து லாரிகளை நிறுத்தி ஓட்டல் கடைகளில் சாப்பிடுகின்றனர்.

    மேலும் இங்கு தாராளமாக குடிப்பதற்கு மதுபானங்கள் கிடைக்கின்றன. இதனால் அப்பகுதியில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து லாரிகள் நிறுத்துவதால் தினமும் சிறுசிறு விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. சில நேரங்களில் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழக்கின்றனர்.

    பலமுறை நாங்களும் இங்கு லாரிகளை நிறுத்தக் கூடாது என்று பல அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் யாரும் இதுவரை கண்டு கொள்வதில்லை. யாராவது உயிரிழந்தால் இங்கு உள்ள ஓட்டல் கடைகளை சில மணி நேரங்களுக்கு மட்டும் மூடுகின்றனர். பின்பு தங்கள் வியாபாரத்தை அவர்கள் தொடங்குகின்றனர்.

    எனவே உடனடியாக இப்பகுதியில் உள்ள மீன் கடைகள், ஓட்டல் கடைகள் அருகே தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமித்து நிறுத்தும் லாரிகளை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

    Next Story
    ×