என் மலர்
உள்ளூர் செய்திகள்

காதலித்த மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்- போக்சோவில் வாலிபர் கைது
- மனோஜ்குமார் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்று விட்டார்.
- மாணவியின் பெற்றோர் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் பிளஸ்-1 படித்து வந்தார். அவரும், தாதப்பட்டியை சேர்ந்த மனோஜ்குமார் (வயது22) என்பவரும் காதலித்து வந்தனர். இதுபற்றி மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததும். பிளஸ்-2 படிப்பதற்கு மாணவியை அனுப்பவில்லை. இதனால் அவர் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது அங்கு வந்த மனோஜ்குமார், மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்று விட்டார். வீடு திரும்பிய பெற்றோர், தங்களின் மகளை காணாமல் பல்வேறு இடங்களில் தேடினர். அன்று இரவு முழுவதும் மாணவி வரவில்லை.
நேற்று காலை அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் மனோஜ்குமார் தன்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக தெரிவித்தார். இதுபற்றி மாணவியின் பெற்றோர் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த மனோஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.






