என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரக்கடையில் பற்றி எரிந்த தீயை மேயர் சண்.ராமநாதன், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பார்வையிட்டனர்.
தஞ்சையில் மரக்கடை தீப்பிடித்து எரிந்து நாசம்
- நேற்று இரவு வேலை முடிந்து அசோக் வீட்டிற்கு சென்று விட்டார்.
- தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தைத்தெருவை சேர்ந்தவர் அசோக். இவர் தஞ்சை- நாகை சாலையில் மரக்கடை வைத்துள்ளார். இங்கு தேக்கு மரத்தினால் ஆன பீரோ, கட்டில், மேஜை உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், அழகிய வேலைபாடுகளுடன் கூடிய பழைய மரப்பொருட்களும் வைக்கப்பட்டு இருந்தன.
நேற்று இரவு வேலை முடிந்து அசோக் வீட்டிற்கு சென்று விட்டார்.
அப்போது நள்ளிரவில் திடீரென மரக்கடையில் தீ பிடித்தது. தீ மளமளவென பரவி மரப்பொருட்கள் பற்றி எரிந்து கொண்டிருந்தன. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தஞ்சை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் மரப்பீரோக்கள், கட்டில்கள், மரப்பொருட்கள் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த தேக்கு மரக்கட்டைகள் முழுவதும் எரிந்தது.
இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த மரக்கடைக்கு பின்புறம் உள்ள கடைகளின் மீது தீ பற்றி எரிந்துவிடக்கூடாது என்பதற்காக தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்ததுடன் இந்த குடோன் பகுதிக்குள் நின்று கொண்டு மரக்கடைக்குள் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை துரிதப்படுத்தினர்.
நீண்ட நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகியது. தீ விபத்து எப்படி ஏற்பட்டது ? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.