search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராசிபுரத்தில்  மூதாட்டிக்கு  மயக்க  மருந்து  கொடுத்து    நகையை  பறித்து  சென்ற  பெண்  கைது
    X
    மல்லிகா ரோட்டில் நடந்து சென்ற போது பதிவான சி.சி.டி.வி. காட்சிகள்.


    ராசிபுரத்தில் மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து நகையை பறித்து சென்ற பெண் கைது

    • மல்லிகா ராசிபுரத்தில் உள்ள பாப்பம்மாளை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது அவர் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மூதாட்டி பாப்பம்மாளுக்கு கொடுத்துள்ளார்.
    • சிகிச்சைக்குப் பின் மயக்கம் தெளிந்த பாப்பம்மாள் தன்னுடைய கழுத்தில் அணிந்திருக்கும் சங்கிலி தங்கம் இல்லை என்பதும் அது கவரிங் நகை என்பதும் அவருக்கு தெரிய வந்தது.


    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் டவுன் செம்மலை படையாச்சி தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் (வயது 82).வயதான நிலையில் பாப்பம்மாள் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் மல்லிகா என்ற பெண் குடியிருந்து வந்தார்.

    தற்போது அவர் நாமக்கல்லில் வசித்து வருகிறார். கடந்த மாதம் மல்லிகா ராசிபுரத்தில் உள்ள பாப்பம்மாளை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது அவர் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை மூதாட்டி பாப்பம்மாளுக்கு கொடுத்துள்ளார். அதைக் குடித்த பாப்பம்மாள் மயக்கம் அடைந்தார்.

    இதை பயன்படுத்தி மல்லிகா பாப்பம்மாள் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அதற்கு பதிலாக அவர் தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த கவரிங் செயினை மூதாட்டிக்கு அணிவித்து விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றார். மல்லிகா சென்ற காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன.

    இந்த நிலையில் மறுநாள் காலை வரை வீடு திறக்கப்படாததால் பாப்பம்மாளின் உறவினர்கள் கதவை திறந்து பார்த்தபோது அவர் மயங்கி கடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சிகிச்சைக்குப் பின் மயக்கம் தெளிந்த பாப்பம்மாள் தன்னுடைய கழுத்தில் அணிந்திருக்கும் சங்கிலி தங்கம் இல்லை என்பதும் அது கவரிங் நகை என்பதும் அவருக்கு தெரிய வந்தது. இது பற்றி பாப்பம்மாளின் மகனும் ஓய்வு பெற்ற போலீஸ்காரருமான சுந்தரராஜன் கடந்த 11-ந் தேதி ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார்.

    இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார் உத்தரவின் பேரில் ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நாமக்கல் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மனைவி மல்லிகாவை (60) கைது செய்தார்.

    அவரிடமிருந்து திருடப்பட்ட தங்க சங்கலியை போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட மல்லிகாவை போலீசார் ராசிபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மாஜிஸ்திரேட் ரெஹனா பேகம் மல்லிகாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த நிலையில் மல்லிகாவுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு பின் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×