search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்துக்கு ஒப்புதல் தர கவர்னர் ஏன் தயங்குகிறார்? ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கேள்வி
    X

    ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

    "ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்துக்கு ஒப்புதல் தர கவர்னர் ஏன் தயங்குகிறார்?" ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கேள்வி

    • ஸ்மார்ட் போன் வந்தபிறகு ஆன்லைன் சூதாட்டம், ஒரு தொற்றுநோயாக மாறியிருக்கிறது.
    • பணத்தை பறிகொடுத்த மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எல்லோரது கைகளுக்கும் ஸ்மார்ட் போன் வந்தபிறகு, ஆன்லைன் சூதாட்டம், ஒரு தொற்றுநோயாக மாறியிருக்கிறது. ஆன்லைன் ரம்மியில் விளையாடி பணத்தை இழப்போரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஒருசிலர் தற்கொலை செய்துகொள்வதும் இன்னொருபுறம் தொடர்கிறது.

    இந்நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூர் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்த, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பந்தனா மஜ்கி என்கிற இளம்பெண், 70 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்திருக்கிறார். பணத்தை பறிகொடுத்த மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியான கடைசி உயிர் பந்தனா மஜ்கி ஆக இருக்கட்டும். இப்படிப்பட்ட இனியொரு இழப்பு யாருக்கும் வேண்டாம்.

    ஆன்லைன் சூதாட்டத்தை நிரந்தரமாக தடுக்கும் வகையில், நிரந்தர சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வந்து, சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இச்சட்ட மசோதா, கவர்னரின் ஒப்புதலுக்கு கடந்த மாதம் 28-ந் தேதியே அனுப்பிவைக்கப்பட்டது.

    ஆனால், கவர்னர் ஆர்.என்.ரவி, சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், காலதாமதம் செய்து வருவதால்தான், இப்போது ஒடிசா இளம்பெண் பந்தனா, ஆன்லைன் சூதாட்டத்துக்கு பலியாகி இருக்கிறார். இதற்கு, கவர்னர் ஆர்.என்.ரவியே முழுப் பொறுப்பு.

    ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழ்நாட்டில் நிரந்தரமாக தடை செய்ய கவர்னர் ஆர்.என்.ரவிக்கு என்ன தயக்கம்? யாரைத் திருப்திப்படுத்த அவர் மவுனமாக இருக்கிறார்?

    இனியும், ஆன்லைன் ரம்மியை நிரந்தரமாக தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் காலதாமதம் செய்து வந்தால், அதனால் பாதிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் கவர்னர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியிருக்கிறார்.

    Next Story
    ×