என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும்-ஆ.ராசா எம்.பி.பேச்சு
- கலைஞர் நூற்றாண்டு விழா நினைவுத்தூண் திறந்து வைக்கப்பட்டது.
- எதிர்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் அவர்களது ஒலிபெருக்கி இணைப்பை துண்டித்து விட்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவுத்தூண் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் விழா நடந்தது. விழாவுக்கு ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை தாங்கினார்.
விழாவில் தி.மு.க துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா கலந்து கொண்டு கலைஞர் நூற்றாண்டு விழா நினைவுத்தூணை திறந்து வைத்து, கட்சி கொடியேற்றி வைத்தார். அதனை தொடர்ந்து.பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.
இதேபோல் கோத்தகிரி ஒன்றிய தி.மு.க சார்பில் ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் தலைமையில் கோத்தகிரி ஜக்கனாரை பள்ளியில் நடந்த விழாவிலும் பங்கேற்று, 500 மலைவாழ் மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவில் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-
பாராளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் பேசியபோது, எதிர்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் அவர்களது ஒலிபெருக்கி இணைப்பை துண்டித்து விட்டனர்.
அந்தளவுக்கு பா.ஜ.கவினர் ஜனநாயகத்திற்கு எதிராக நடந்து கொள்கின்றனர்.பா.ஜ.க ஆட்சியில் மதவெறி உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் திராவிட மொழிகளைக் கொண்ட ஆட்சி நடைபெறுகிறது. திராவிடம் என்பது மதத்திற்கும், சாதிக்கும் எதிரானது.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் மோடியை வீட்டிற்கு அனுப்ப இந்தியர்களாகிய நாம் ஒன்றிணைய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் மாவட்ட செயலாளர் முபாரக், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, ஊட்டி நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் தம்பி இஸ்மாயில், எல்கில் ரவி, செல்வராஜ், ரீட்டா மேரி, பிரியா வினோதினி, மேரி பிளோரீனா, திவ்யா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.






