என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள் சோதனை என்ற பெயரில் சிறு வியாபாரிகளுக்கு அபராதம் விதிப்பது குறித்து முதல்-அமைச்சரிடம் முறையிட உள்ளோம் - வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி
- பன்னாட்டு நிறுவனங்கள் இன்றைக்கும் பிளாஸ்டிக் கவர்களில் தான் அனைத்து பொருட்களையும் பேக்கிங் செய்கின்றனர்.
- தற்போது நாடு முழுவதும் அனைத்து பொருட்களின் விலையும் 30 சதவீதம் அதிகரித்து உள்ளது.
ஊட்டி,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ஊட்டியில் உள்ள மார்க்கெட்கடைகளை இடமாற்றம் செய்யும் பிரச்சினையில் சுமூக தீர்வு ஏற்படுத்திய எம்.பி. ராஜாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறி விற்பனை செய்யும் கடைகளுக்கு அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் அபராதம் மற்றும் சீல் வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக இதுவரை மாற்று பொருட்கள் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த நிலையில் அரசாங்கம் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கடைகள் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்புடையது அல்ல.
பன்னாட்டு நிறுவனங்கள் இன்றைக்கும் பிளாஸ்டிக் கவர்களில் தான் அனைத்து பொருட்களையும் பேக்கிங் செய்து விற்பனை செய்து வருகின்றன.
ஆனால் அவர்கள் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கைகளும் எடுப்பது இல்லை. இதற்கு மாறாக சிறு வியாபாரிகள் மீது மட்டும் அரசாங்கம் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறது.
எனவே நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருக்கும் கடைகளுக்கு அதிக அபராதம் விதிப்பதையும், கடைக்கு சீல் வைப்பதையும் அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளோம்.
மத்திய அரசின் பொருளாதார கொள்கை தவறாக உள்ளது. இதனால் தற்போது நாடு முழுவதும் அனைத்து பொருட்களின் விலையும் 30 சதவீதம் அதிகரித்து உள்ளது. இது பொதுமக்களிடம் அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
எனவே நாடு முழுவதும் அனைத்து பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யும் வகையில் மத்திய-மாநில அரசுகள் சிறப்பு கமிட்டி அமைக்க வேண்டும். இதன்மூலம் அவற்றின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






