search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு - உபரி நீர் 5,000 கன அடி திறப்பு
    X

    உபரி நீர் திறப்பு

    பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு - உபரி நீர் 5,000 கன அடி திறப்பு

    • பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.
    • முழு கொள்ளளவை எட்டி வருவதால் பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 5,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    திருவள்ளூர்:

    மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.

    முழு கொள்ளளவை எட்டி வருவதால் பூண்டி ஏரியின் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. வினாடிக்கு 5,000 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் ஆந்திர மாநிலம் அம்மாபள்ளி அணை நீர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து வரும் நீர் பூண்டி நீர்தேக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் அதிகபட்ச கொள்ளளவான 35 அடியில் தற்போது 34 அடி வரை நீர் தேங்கியுள்ளது.

    இன்று மாலை நிலவரப்படி ஆந்திர மாநிலம் அம்மாபள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீரானது தமிழக எல்லையான பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் கலந்து சுற்றுப்புற பகுதியில் உள்ள மழைநீர் வரத்து வினாடிக்கு 10,000 கன அடி மற்றும் கிருஷ்ணா கால்வாய் மூலம் 610 கன அடி நீர் என மொத்தம் 10,610 கன அடி வீதம் நீர் வரத்துகொண்டு இருக்கிறது.

    இதனால் தற்போது நீர்த்தேக்கத்தில் 2,823 மில்லியன் கன அடி நீர் உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 5,000 கன அடி உபரி நீரை பொதுப்பணி அதிகாரிகள் திறந்து கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்ட நீர் அதிக அளவு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதையடுத்து, பூண்டி கிராமத்தை அடுத்த சுற்றுப்புற கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்றாம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, ஏறையூர், பீமன் தோப்பு, கொரக்கதண்டலம், சோமதேவம்பட்டு, மெய்யூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பாண்டிக்காவனூர், ஜெகநாதபுரம், புதுக்குப்பம், கன்னிபாளையம், வன்னிபக்கம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயில்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், காரனோடை, மீஞ்சூர், எண்ணூர் பகுதிகளில் கரையோர மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பூண்டி ஏரி மற்றும் கொசஸ்தலை, ஆரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் யாரும் ஏரியில் குளிக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×