search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத்துடன் கடனுதவி
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத்துடன் கடனுதவி

    • மாற்றுத்திறனாளிகள் ரூ.5 கோடி வரை மானியத்துடன் சுயதொழில் கடனுதவி பெறலாம்.
    • திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலையில்லாத மாற்றுதிறனாளிகள் மாவட்ட தொழில் மையத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் மூலம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை மானியம் பெற்று சுயதொழில் தொடங்கலாம்.

    வேலையில்லாத திண்டாட்டத்தினை போக்கு வதற்காக தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் சுயதொழில் கடனுதவி திட்டங்களை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்தி தொழில் முனைவோர்களாக திகழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை நிறைவேற்றிட தொழில் வணிகத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 21 வயது நிரம்பிய மாற்றுதிறனாளிகள், 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பட்டய படிப்பு மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித்தகுதிகள் பெற்றிருந்தால் உற்பத்தி பிரிவு மற்றும் சேவைப் பிரிவு ஆகிய தொழில்களுக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 35 விழுக்காடு மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.75லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான கடனுதவி வழங்கப்படுகிறது. கடனுதவித் தொகையினை திரும்ப செலுத்திடும் தவணைத் தொகைகளில் விதிக்கப்படும் வட்டியில் 3 விழுக்காடு வட்டித் தொகையினை பின்னேற்பு மானியமாக அரசு வழங்கி வருகிறது.

    பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலும், சேவைத்தொழில் பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெறுவதற்கு எவ்வித கல்வித் தகுதியும் தேவையில்லை.

    மேற்கண்ட கடன் வரம்பிற்கு மேல் கடனுதவி தேவைப்படும் பட்சத்தில் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமானதாகும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உற்பத்தி தொழில்களுக்கு ரூ.50 லட்சம் மற்றும் சேவை தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையில் திட்ட மதிப்பீடாக கொண்டு வரலாம்.

    இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில் வகைகளுக்கு 35 விழுக்காடு மானியமாக ரூ.17.50 லட்சம் அதிகபட்சமாக வழங்கப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் செலுத்தும் 5 விழுக்காடு பங்களிப்புத் தொகையானது மாற்றுத்திறனாளி நலத்துறையினரால் மானியமாக வழங்கப்படு கிறது. திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளிகள் மேற்கண்ட கடனுதவி திட்டங்களில் தங்களுக்கு தகுதியான கடனுதவி திட்டத்தை தேர்வு செய்து www.msmeonline.tn.gov.in/uyegp/needs மற்றும் www.kviconline.gov.in Agency DIC என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து அரசு மானியங்களை பெற்று பயனடையுமாறும் மற்றும் மாவட்ட தொழில் மையத்தினை நேரிலோ அல்லது 8925534036 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்கள் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×