என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயம்
- விவசாயிகளுக்கு வழங்க வேளாண் எந்திரங்கள், கருவிகளுக்கான வாடகை நிர்ணயம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- விவசாயிகள் இ-வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்து முன்பணம் செலுத்தி பயன்பெறலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உழவு பணிகள், அறுவடை பணிகள், நிலம் சமன்படுத்தும் பணிகள் மேற்கொள்ள குறைந்த வாடகையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
விவசாய நிலத்தில் உழவு பணிக்கு தேவைப்படும் டிராக்டர் (உழவுக் கருவியுடன்) 1 மணிக்கு ரூ.500- வாடகையிலும், நெல் அறுவடை எந்திரம் (டிராக் வகை) ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,880-ம், சக்கர வகை நெல் அறுவடை எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,160 -ம், மண் தள்ளும் எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,230-ம், சக்கர வகை மண் அள்ளும் எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.890-ம், டிராக் வகை மண் அள்ளும் எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,910- எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வாகனத்துடன் இயங்கக் கூடிய தேங்காய் பறிக்கும் எந்திரம் 1 மணிக்கு ரூ.450- என்ற வாடகையிலும் வழங்க வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட வேளாண் எந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு தேவைப்படும் விவசாயிகள் இ-வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்து முன்பணம் செலுத்தி பயன்பெறலாம்.
இது தொடர்பாக விருது நகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி மற்றும் திருச்சுழி வட்டார விவசாயிகள் உதவி செயற் பொறியாளர் (வே.பொ), விருதுநகர் (தொலைபேசி எண். 90802 30845) அலுவலகத்தையும், சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் வத்ராயிருப்பு விவசாயிகள் உதவி செயற் பொறியாளர் (வே.பொ), ஸ்ரீவில்லிப்புத்தூர் (தொலைபேசி எண். 94422 62017) அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு டேனிஸ்டன், செயற் பொறியாளர் (வே.பொ.), இணை இயக்குநர் (வேளாண்மை) அலுவலக 2-ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் (தொலைபேசி எண். 94431 72665, 94432 12311) என்ற அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






