search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையப்பர் கோவிலில் விநாயகர் கொடியேற்றம்
    X

    நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் விநாயகர் கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

    நெல்லையப்பர் கோவிலில் விநாயகர் கொடியேற்றம்

    • நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 11-ந்தேதி நடைபெறுகிறது.

    நெல்லை:

    பிரசித்தி பெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் நடத்தப்படவில்லை.

    இந்த ஆண்டு ஆனிப் பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை தொடங்குவதற்காக இன்று காலை விநாயகர் கொடியேற்றம் கோவிலில் நடைபெற்றது.

    இதில் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து திருவிழா அழைப்பிதழ் தயாரித்தல், கோவிலில் பந்தல் அமைத்தல், மின் அலங்காரம், உள், வெளி பிரகாரங்கள் சுத்தப்படுத்துதல், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 5 தேர்களை பாதுகாக்க வேண்டி கொட்டகைகளை பிரித்து எடுத்தல், தேர்களை சுத்தப்படுத்துதல், தேர் அலங்கார பணிகள் உள்ளிட்டவை நடைபெறும்.

    தொடர்ந்து வருகிற 20-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 6 நாட்கள் முதல் மூவர் உற்சவமும், 26 முதல் ஜூலை 2-ந்தேதி வரை 7 நாட்கள் சந்திரசேகர் உற்சவமும் நடைபெறும்.

    வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை சுவாமி சன்னதி தங்க கொடி மரத்தில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடைபெறுகிறது. பின்னர் சுவாமி நெல்லையப்பர் தேர் கால் நாட்டுதல் நடக்கிறது.

    தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறும். விழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இரவு சுவாமி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ரத ஊர்வலமும் நடைபெற உள்ளது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான ஜூலை 11-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சுவாமி, அம்பாள் தேர் உள்ளிட்ட 5 தேர்கள் ரத வீதிகளில் வலம் வரும்.

    10-ம் திருவிழா அன்று சுவாமி, அம்பாள், அஸ்திரதேவர், அஸ்திர தேவியருக்கு பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு சோமாஸ்காந்தர் பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×