search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் பூவரசங்குப்பம்  லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    விழுப்புரம் அருகே உள்ள பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    விழுப்புரம் பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • காலை 7.30 மணிக்கு மேளதாளம் முழங்க, லஷ்மி நரசிம்ம பெருமாள் தேருக்கு எழுந்தருளினார்.
    • கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியபடி, தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே பூவரங்குப்பம் கிராமத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. தென் அகோபிலம் என்று போற்றப்படும் இக்கோயில், கி.பி. 7-ம் நூற்றாண்டில் முதலாம் பல்லவ மன்னரால் கட்டப்ப ட்டதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் முக்கிய 8 நரசிம்மர் கோயிலில், இந்த பூவரசங்குப்பம் கோயில், நடுவில் இருக்கிறது. இக்கோயிலில், மூலவர் லட்சுமி நரசிம்மர், 4 கரங்க ளுடன் காணப்படுகிறார். இந்த கோவிலில், 150 ஆண்டுகளுக்குப் பின், பிரமோற்சவ விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 32 அடி உயரத்தில் புதியத் தேர் செய்யப்பட்டு, கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி வெள்ளோட்ட விழா நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து, பிரம்மோற்சவ விழா, கடந்த 30-ம் தேதி தொடங்கியது. இவ்விழா, தொடர்ந்து 11 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண வைபவம், கடந்த 6 ஆம் தேதி நடை பெற்றது. பிரம்மோற்சவ விழாவின் 9-ம் நாளான இன்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, காலை 7.30 மணிக்கு மேளதாளம் முழங்க, லஷ்மி நரசிம்ம பெருமாள் தேருக்கு எழுந்தருளினார்.

    அதனைத் தொடர்ந்து, காலை 8 மணிக்கு தேர் புறப்பாடானது. விழுப்புரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமணன் தலைமை தாங்கி இத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவில் முன்னால் எம்.எல்.ஏ புஷ்பராஜ், கண்டமங்கலம் ஒன்றிய சேர்மன் வாசன், கோலியனூர் ஒன்றிய சேர்மன் சச்சிதானநந்தம், கண்டமங்கலம் தி.மு.க ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியபடி, தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். கோயில் முன்பிருந்து தேர் புறப்பட்டு, சிவன் கோயில் தெரு உள்ளிட்ட 4 மாடவீதிகள் வழியாக சென்று, மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தைக் காண பூவரசங்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    Next Story
    ×