என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே துணிகரம் கடப்பாரையால் பூட்டை உடைத்து 12 லட்சம் நகை-பணம் கொள்ளை
- பீரோவில் இருந்த 8 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 3 லட்சத்து 70 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்றனர்.
- போலீசார் அப்பகுதியில் கிடைத்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் ஆனைக்கல் உள்ளது.
இங்குள்ள முனிவெங்கடப்பா லே-அவுட் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் மஞ்சுநாத். இவர் குடும்பத்தோடு நேற்று முன்தினம் ஆந்திரா மாநிலம், சித்தூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
அவரது வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் மூன்று பேர் நள்ளிரவில், அவரது வீட்டின் முன்பக்க கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
பின்னர் வீட்டின் பீரோவில் இருந்த 8 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 3 லட்சத்து 70 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்றனர்.
பின்னர் அந்த மூன்று திருடர்களும் அதேபகுதியில் இருந்த ஞான சித்தாந்த ஆசிரமத்திற்குள் நுழைந்துள்ளனர். அங்கு திருடுவதற்கு விலை உயர்ந்த பொருள்கள் ஏதும் இல்லாததால் கடும் ஆத்திரத்தில் ஆசிரமத்தில் இருந்த விளக்கு மற்றும் சில பொருள்களை வெளியே தூக்கி எரிந்துள்ளனர்.
இந்த காட்சிகள் ஆசிரம பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய மஞ்சுநாத்தின் குடும்பத்தினர் வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மஞ்சுநாத் ஆனைக்கல் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசார் அப்பகுதியில் கிடைத்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மூன்று நபர்கள் ஒரே மாதிரியான உடைகளை அணிந்து அப்பகுதியில் நுழைந்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
இந்த சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






