search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது
    X

    வேலூரில் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது

    • குழந்தைகள், முதியவர்கள் கடும் பாதிப்பு
    • சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை, பனி மூட்டம் என சீதோஷ்ண நிலை மாறி, மாறி வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்பட்டு வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரமாக காலை நேர பனி மூட்டம் பகல் 12 மணி வரை நீடித்து வருகிறது. இரவிலும் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

    காய்ச்சல் குறைந்த பட்சம் ஒரு வாரம் இருக்கிறது. இதனால் சிறுவர்கள், முதியவர்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

    ஏற்கெனவே, டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வரும் நிலையில் தற்போது வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து, மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்புப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்காக, கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகள், பயன்படுத்தி வீசப்பட்ட பொருட்களில் எங்காவது கொசுப்புழு வளர்கிறதா? என்பதை கண்டறிந்து அவற்றில் வளர்ந்துள்ள கொசுப்புழுக்களை அழித்து வருகின்றனர்.

    மேலும், தண்ணீர் தேங்கும் பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகை மருந்தும் அடித்து வருகின்றனர்.

    இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி சார்பில் வைரஸ் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் தொடங்கியுள்ளது.

    இது தொடர்பாக வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ''வேலூர் மாநகராட்சியில் 10 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதன் சார்பில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிகிச்சை அளித்தாலும் தேர்வு செய்யப்பட்டுள்ள குடியிருப்பு பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்துக்கு இந்த சிறப்பு முகாம் நடத்தப்படும்.

    அதன் பிறகு அடுத்தகட்ட முகாம்கள் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×