search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தம் விடுதியில் தங்கி கொள்ளையடிக்க திட்டம்
    X

    குடியாத்தம் விடுதியில் தங்கி கொள்ளையடிக்க திட்டம்

    • தூத்துக்குடி கும்பலுக்கு வலைவீச்சு
    • ராணுவவீரர் வீட்டில் திருடியவர் கைது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த காளபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 58). ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

    இவர் கவுதமபுரம் கிராமத்தில் நடந்த உறவினருடைய துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்தோடு வீட்டை பூட்டிக்கொண்டு சென்றார்.

    இந்த நிலையில் பகல் 12 மணியளவில் அவருடைய இரும்பு கதவை மர்ம நபர் ஒருவர் உடைத்து வீட்டின் உள்ளே சென்றார்.

    இதனை பக்கத்து வீட்டில் வசிப்பவர் கண்டு கூச்சலிட்டார். இதை அறிந்த மர்ம நபர் வீட்டின் சுவர் மீது ஏறி தப்பி ஓடி அருகில் இருந்த காட்டுப் பகுதியில் தலைமறைவாகினார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் அவரை போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று இன்ஸ்பெக்டர் கருணாகரன் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த முத்துராஜா (வயது 33) என்பது தெரிய வந்தது.

    மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 5-க்கும் மேற்பட்ட கும்பல் குழுவாக வந்துள்ளது. குடியாத்தம் பகுதியில் தங்கும் விடுதியில் தங்கி சுற்றுப்புற பகுதிகளில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.

    தொடர்ந்து பள்ளிகொண்டா போலீசார் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வீடுகளில் தீவிர சோதனை செய்தனர். போலீசார் வருவதை அறிந்த மர்மகும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் மாவட்ட முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் வீட்டில் திருடி பிடிபட்ட முத்து ராஜாவை போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×