என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் செய்த காட்சி.
அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டம்
- அமிர்தி சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
- விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படுவதாக புகார்
வேலூர்:
வேலூர் மாவட்டம் அமிர்தியில் வன உயிரின பூங்கா உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தினந்தோறும் சென்று வருகின்றனர்.
விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நாக நதி கூட்ரோட்டில் இருந்து அமிர்தி பூங்கா வரை உள்ள சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.
தற்போது சாலை முழுவதும் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.
சில இடங்களில் குலம்போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
இதில் அதிக அளவில் விபத்துகளும் நடக்கிறது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் கிராம மக்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். மேலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
அமிர்தி சாலையை சீரமைக்க கோரி அந்த பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலையில் நஞ்சுக்கொண்டாபுரம் கிராம மக்கள் அமிர்தியிலிருந்து வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் இந்த ஊராட்சி மன்ற தலைவர் சீதா தமிழ்ச்செல்வன், துணைத்தலைவர் கன்னியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலை சீரமைப்பது குறித்து வனத்துறை மற்றும் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு பஸ்சை விடுவித்தனர்.
வனத்துறையில் நிதி இல்லை
அமிர்தி சாலையை சீரமைக்க வனத்துறையினர் தற்போது நிதி இல்லை என கூறுகின்றனர்.இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






